விஜய் சேதுபதியின் ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணி நிறைவு

இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள ‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’ (Slum Dog: 33 Temple Road) திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.
பூரி கனெக்ட்ஸ் (Puri Connects) நிறுவனத்தின் சார்பில் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் இணைந்து தயாரித்துள்ள இப்படம், ஏற்கெனவே வெளியான விளம்பரக் காணொளிகள் மற்றும் முன்னோட்டங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனித்துவமான கதை சொல்லும் பாணி மற்றும் விறுவிறுப்பான திரைக்கதைக்குப் பெயர் பெற்ற பூரி ஜெகன்நாத், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் இப்படத்தை உருவாக்கியுள்ளார். படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களின் அறிமுகக் காணொளிகள் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளன.
படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் படத்தைத் திரையரங்குகளில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான விளம்பரப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார். மேலும், தபு, துனியா விஜய், ஜரினா வஹாப், பிரம்மாஜி, வி.டி.வி. கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சாம் கே. நாயுடு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைத்துள்ளார். படத்தொகுப்புப் பணிகளை சந்தோஷ் நூஜில்லா மேற்கொண்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக ‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’ வெளியாகவுள்ளது.
