ஹாலிவுட்டில் பிரம்மாண்டமாக அரங்கேறும் ‘ராமாயணா’அக்டோபர் 27-ல் உலகளாவிய பிரீமியர் காட்சி!

ரன்பீர் கபூர், ராக்கிங் ஸ்டார் யஷ் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் உலகளாவிய பிரீமியர் காட்சி, அக்டோபர் 27-ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அகாடமி மியூசியம் ஆஃப் மோஷன் பிக்சர்ஸின் டேவிட் கெஃபென் திரையரங்கில் மாலை நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சி, அழைப்பின் பேரில் மட்டுமே பங்கேற்கக்கூடிய சிறப்பு நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஹாலிவுட் பிரபலங்கள், திரைப்பட இயக்குநர்கள், சர்வதேச ஊடகத்தினர் மற்றும் திரையுலகின் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
திரைப்படக் கலை, வரலாறு மற்றும் தொழில்நுட்பத்தைப் போற்றும் வகையில் செயல்பட்டு வரும் அகாடமி மியூசியம், இதற்கு முன்பு பல்வேறு சர்வதேசத் திரைப்பட நிகழ்ச்சிகளையும் ஆஸ்கர் விருது தொடர்பான கொண்டாட்டங்களையும் நடத்தியுள்ளது. அந்த வகையில், இந்தியாவின் புகழ்பெற்ற இதிகாசமான ராமாயணத்தை உலக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் இந்தப் பிரீமியர் முக்கியத்துவம் பெறுகிறது.
சுமார் 945 பேர் அமரக்கூடிய டேவிட் கெஃபென் திரையரங்கில், இப்படத்தின் 3D பிரீமியர் காட்சி திரையிடப்பட உள்ளது. மேலும், தீபாவளிப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இந்தியப் பண்டிகைக் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சிவப்புக் கம்பள வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் விருந்தினர்கள் பாரம்பரிய இந்தியப் பண்டிகை உடைகளை அணிந்து வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நிதேஷ் திவாரி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தை, நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம், DNEG மற்றும் யஷ்ஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. படத்திற்கு ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளனர்.

இப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிப் பண்டிகையின்போது வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள ‘ராமாயணா’, ஐமேக்ஸ் தொழில்நுட்பத்திலும் திரையிடப்பட உள்ளது. இந்தியாவுக்கு வெளியே இப்படத்தின் சர்வதேச விநியோகப் பணிகளை சோனி பிக்சர்ஸ் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது.
இந்திய இதிகாசத்தை உலகத் திரையுலகின் முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தும் இந்தப் பிரீமியர் நிகழ்ச்சி, ‘ராமாயணா’ படத்தின் சர்வதேச வெளியீட்டுக்கான முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
