நம் அனைவருக்கும் சில மனநலப் பிரச்சினைகள் உள்ளன: ஏ.ஆர்.ரகுமான் கருத்து
‘மனநலப் பிரச்சினை, இங்கே அனைவருக்குள்ளேயும் இருக்கிறது’ என ஏ.ஆர்.ரகுமான் பேசியுள்ளார். இது குறித்த தகவல் காண்போம்.
இந்திய சினிமாவையும் கடந்து, உலகளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவருக்கும் சாய்ரா பானுவுக்கும் இடையே 1995 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று, தற்போது மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த வாரம் ஏ.ஆர். ரகுமானின் மனைவி சாய்ரா பானு, திடீரென கணவர் ரகுமானை பிரிவதாக அறிவித்தார். அதற்கு அடுத்த நாள் ஏ.ஆர்.ரகுமானும் விவாகரத்தை உறுதி செய்தார்.
இது சம்பந்தமாக, பல விதமான வதந்திகள் இணையத்தில் பரவி வந்த நிலையில் சாய்ரா பானு ‘உலகின் சிறந்த மனிதர்களில் ஒருவர் ரகுமான். எங்கள் விவாகரத்து சம்பந்தமாக அவர் மீது அவதூறு பரப்புவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது’ என்றார்.
முன்னதாக, ரகுமானின் மகனும் இசையமைப்பாளருமான அமீன், ‘ ஒருவரின் சுதந்திரத்தையும் தனிமையையும் குறுக்கீடு செய்து களங்கம் ஏற்படுத்தாதீர்கள்’ என்கிற கருத்தியலாய் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது கோவா திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பேசியுள்ள ரகுமான் ‘நம் அனைவருக்கும் சில மனநலப் பிரச்சினைகள் உள்ளன.
எல்லோருக்குள்ளும் வெற்றிடம் உள்ளது. அதை நிரப்பதான் நாம் கதைகளைக் கேட்கிறோம். தத்துவங்களைப் படிக்கிறோம். பொழுதுபோக்குகளை மேற்கொள்கிறோம். அவை, நம் பிரச்சினைகளை ஆற்றுகின்றன’ என தெரிவித்துள்ளார்.

