ஏ.ஆர்.ரகுமான் நலமாக உள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு..
ஏ.ஆர்.ரகுமான் உடல்நிலை பற்றி ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம் என பிரமுகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நேற்று லண்டனில் இருந்து சென்னை திரும்பிய நிலையில், திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. தற்போது அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், ‘மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரகுமானின் உடல்நிலை குறித்து மருத்துவர்களை தொடர்புகொண்டு கேட்டறிந்தேன். அவர் நலமாக உள்ளார். விரைவில் வீடு திரும்புவார் என பதிவிட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சியில் நடத்தப்பட்ட செம்மொழி மாநாட்டிற்கு ஏ.ஆர்.ரஹ்மான் செம்மொழியான தமிழ் மொழியால் பாடலை இசையமைத்திருந்தார். இப்பாடல் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
‘ரோஜா’ படத்தில் தொடங்கிய மேஜிக்கால் நாங்கள் மெய்மறந்து கிடக்கிறோம். மீண்டும் உங்களது இசையால் பல மேஜிக் மற்றும் மாயஜாலங்களை ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்த்த வேண்டும்.
மீண்டு வாருங்கள் எங்கள் ஆஸ்கர் நாயகனே என்றும் ரசிகர்கள் எக்ஸ் தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் உடல்நிலை குறித்த செய்தியறிந்து மனம் பதறிவிட்டோம். இசைப்புயலே உங்களுக்கு ஒன்றும் ஆகாது விரைந்து வருவீர்கள். உங்களது அந்த சிரிப்பை காண காத்திருக்கிறோம்’ என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சிகிச்சை முடிந்து ரகுமான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். பூரண குணத்துடன் நலமாக இருக்கிறார். அவரைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என பிரபலங்களும் தெரிவிக்கின்றனர். ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம். அவர் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் தற்போது தக் லைஃப், தேரே இஷ்க் மெய்ன் போன்ற படங்களில் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
