எச். வினோத் இயக்கத்தில், தமிழக முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம், தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வெளியீடு தள்ளிப்போனது. இதற்கிடையில், படம் ஆன்லைனில் கசிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அதுதொடர்பாக பலரும் கைது செய்யப்பட்டதும் பேசுபொருளானது.
முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, படத்தின் வெளியீட்டு தேதி குறித்து சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில், தற்போது வெளியாகியுள்ள புதிய தகவலின்படி, ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு அடுத்த மூன்று நாட்களுக்குள் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், படத்தை ஜூலை மாதத்திலேயே வெளியிட தயாரிப்புக் குழு திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், ஜூலை 16 அல்லது 23 ஆகிய தேதிகளில் படம் வெளியாகும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் பதிப்புக்கான தணிக்கைப் பணிகள் விரைவில் நிறைவடைய உள்ள நிலையில், பிற மொழிகளுக்கான தணிக்கை நடைமுறைகள் முடிவடைய இன்னும் ஒரு வாரம் வரை ஆகலாம் என்றும் கூறப்படுகிறது. அதன் பின்னரே அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், இதற்கு முன்பும் ‘ஜனநாயகன்’ வெளியீட்டு தேதி குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. எனவே, படக்குழுவின் அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.