சுயாதீன இசையின் மூலம் சர்வதேச அளவில் இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் தமிழ் பாடகி தீ, அமெரிக்க பாப் இசைக் கலைஞரும் KATSEYE குழுவின் உறுப்பினருமான லாரா ராஜ் உடன் இணைந்து ‘வாரி வாரி – VARI VARI’ பாடலின் ரீமிக்ஸ் வடிவத்தை வெளியிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து தயாரித்த ‘வாரி வாரி’ பாடலுக்கு பாடலாசிரியர் விவேக் வரிகளை எழுதியிருந்தார். தீயின் குரலில் வெளியான இந்த தமிழ் இண்டி பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறது.
- Advertisement -
இந்நிலையில், சர்வதேச இசைக் கலைஞர்களான தீ மற்றும் லாரா ராஜ் இணைந்து ‘வாரி வாரி’ பாடலின் புதிய ரீமிக்ஸ் வடிவத்தை உருவாக்கியுள்ளனர். இந்த ரீமிக்ஸுக்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள நிலையில், 808 கிருஷ்ணா இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இரு பெண் கலைஞர்களின் இந்த சர்வதேச இசைக் கூட்டணி, இசையின் மூலம் கலாச்சாரப் பரிமாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. வெளியானது முதல் ரீமிக்ஸ் பாடல் இசை ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.
தீ மற்றும் லாரா ராஜின் குரல்களில் உருவாகியுள்ள ‘வாரி வாரி’ ரீமிக்ஸ், தமிழ் இசையின் தனித்துவத்தை சர்வதேச இசை ரசிகர்களிடம் கொண்டு செல்லும் மற்றுமொரு முயற்சியாக அமைந்துள்ளது.