எம்.பி. ஆகிறார் கமல்ஹாசன்?: வைரமுத்து சூசக தகவல்

‘அடுத்த படத்தின் தலைப்பை யார் சொன்னாலும் மாற்றாதீர்கள்’ என கமல்ஹாசனிடம் கூறியுள்ளார் வைரமுத்து. இந்நிகழ்வு பற்றிய தகவல்கள் பார்ப்போம்..

தமிழ் சினிமாவில், கமல்-வைரமுத்து இருவரும் பேராளுமைகள்.

இந்நிலையில், கமல்ஹாசனை சந்தித்திருக்கிறார் வைரமுத்து. அந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து,

‘நாளாயிற்று, நட்பு நிமித்தமாகச் சந்தித்தேன் நண்பர் கமல்ஹாசன் அவர்களை. ஒளிபடைத்த கண்களோடு உரையாடினார் அரசியல் பேசினோம்; கலை குறித்துக் கலந்தாடினோம்; உடல் நிலை, உணவு நிலை குறித்து அறிவாடினோம்; சமூக ஊடகங்கள் குறித்துத் தெளிவு பெற்றோம்.

‘செயற்கை நுண்ணறிவில் உங்களுக்குப் பயிற்சி உண்டா’ என்றார். செயற்கை நுண்ணறிவைக் கவிதைக்குப் பயன்படுத்தினேன். ஆனால், அதில் ஜீவன் இல்லை’ என்றேன்.

அடுத்த படத்திற்கான தலைப்பைச் சொன்னார். ‘நன்று, யார் சொன்னாலும் மாற்றாதீர்கள்’ என்றேன்.

டெல்லிப் பட்டணத்திற்கான சமிக்ஞை தெரிந்துகொண்டேன் மகிழ்ந்து விடைகொண்டேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதில், டெல்லி பட்டணத்திற்கான சமிக்ஞை என வைரமுத்து குறிப்பிட்டிருப்பது ‘ராஜ்ய சபா பதவியைதான்’ என நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

திமுக சார்பில் கமல்ஹாசன் டெல்லிக்கு ராஜ்ய சபா எம்பியாக அனுப்பப்பட உள்ளார் என்பதைதான் வைரமுத்து சூசகமாக பதிவிட்டுள்ளார் என்றும் நெட்டின்சகள் குறிப்பிட்டுள்ளனர்.

Kamal HaasanpoliticsVairamuthuகமல்ஹாசன்வைரமுத்து