‘தலைவர் 173’: ஏப்ரல் 27 முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவிருக்கும் 173-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு, வரும் ஏப்ரல் 27-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘டான்’ படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் ஏப்ரல் 20-ம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது சில மாற்றங்களுடன் ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 46 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனம் இப்படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரிப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகரும் இயக்குநருமான பாசில் ஜோசப், ரஜினிகாந்திற்கு மகனாக நடிக்கவிருப்பதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. இவர்களுடன் நடிகை பிரியங்கா மோகன் மற்றும் பழம்பெரும் நடிகை ஷோபனா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது. ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் பணிகளை விரைந்து முடித்து, வரும் 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியிடப் படக்குழு தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.

ஏற்கனவே ‘ஜெயிலர்’ மற்றும் ‘கூலி’ ஆகிய படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், அடுத்ததாகப் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வரும் ஜூன் மாதம் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து, சிபி சக்கரவர்த்தி பாணியிலான கலகலப்பான மற்றும் அதிரடி நிறைந்த இந்த புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் தலைப்புக்காகத் திரையுலகமே ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறது.

actor basil josephactor kamal haasanactor rajinikanthCibi ChakaravarthiPriyanka MohanRaaj Kamal Films International