கே.ஜே.ஆரின் “அங்கீகாரம்” படத்திற்கு “யு” தணிக்கை சான்றிதழ்

ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படம், திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து U சான்றிதழ் பெற்று அனைவரும் பார்க்கக்கூடிய படமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து படம் வரும் ஜூன் 26-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதாநாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தின் டிரெய்லரும், முதல் பாடலான ‘சட்ட சட்ட சட்ட சான்றோரே’ பாடலும் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. ஜிப்ரான் இசையமைப்பில், கவிஞர் கார்த்திக் நேத்தா எழுதிய இந்தப் பாடலை பாடகி வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ளார். சட்டம், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்த கேள்விகளை முன்வைக்கும் பாடலாக இது கவனம் ஈர்த்துள்ளது.

பல உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ‘அங்கீகாரம்’, விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அங்கீகாரத்திற்கான அவர்களின் போராட்டத்தை மையமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக, தனக்கு மறுக்கப்பட்ட உரிமையை மீட்டெடுக்க நீதிமன்றத்தை நாடும் ஒரு தடகள வீரரின் வாழ்க்கைப் போராட்டத்தை மையமாக வைத்து கதை நகர்கிறது.

இயக்குநர் பா. இரஞ்சித்தின் முன்னாள் உதவி இயக்குநரான தென்பாதியான் இயக்கியுள்ள இந்த திரைப்படம், சமூக அக்கறை கொண்ட கதைக்களத்துடனும் தாக்கமிக்க வசனங்களுடனும் உருவாகியுள்ளது. படத்தின் டிரெய்லரில் இடம்பெற்ற வசனங்கள் ஏற்கனவே ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளன.

இப்படத்தில் கே.ஜெ.ஆருடன் விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, சிந்தூரி விஸ்வநாத், ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப ரீதியாகவும் படத்திற்கு வலு சேர்க்கும் வகையில், ஜிப்ரான் இசையமைத்துள்ள நிலையில் ஏ. விஸ்வநாத் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். பீட்டர் ஹெயின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். தினேஷ்குமார் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ள நிலையில், ராமு தங்கராஜ் கலை இயக்கத்தையும், சம்பத் ஆழ்வார் ஒலி வடிவமைப்பையும், ஷெரீப் நடன அமைப்பையும் மேற்கொண்டுள்ளனர்.

டிரெய்லர், பாடல்கள் மற்றும் படத்தின் கரு ஆகியவற்றுக்கு கிடைத்துள்ள வரவேற்பால், ஜூன் 26-ஆம் தேதி வெளியாகும் ‘அங்கீகாரம்’ திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

AngikaaramANGIKAARAM Certified with ‘U’ certificateKJRMansoor Ali KhanRANGARAJ PANDEYVASUNDHARA KASHYAPViji Venkateshஅங்கீகாரம்