‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் வெற்றிக்காக கோயிலில் சிறப்பு பூஜை

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2 – மஹாசக்தி’ திரைப்படத்தின் வெற்றிக்காக, சென்னை சோழிங்கநல்லூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் சிறப்பு யாகம் மற்றும் வழிபாடு நடைபெற்றது. வரும் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி வெளியீடாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இந்தச் சிறப்பு வழிபாட்டில் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஐசரி கே. கணேஷ், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தர் டாக்டர் ஆர்த்தி கணேஷ், படத்தின் இணைத் தயாரிப்பாளர் குஷ்மிதா கணேஷ் ஆகியோர் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். இவர்களுடன் படத்தின் இயக்குநர் சுந்தர்.சியும் கலந்துகொண்டார். படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடைபெற்ற இந்த ஆன்மிக நிகழ்வு, படக்குழுவினரின் இறைநம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.

- Advertisement -

சுந்தர்.சி இயக்கத்தில், டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் உருவாகியுள்ள இப்படத்தில் நயன்தாரா கதையின் நாயகியாக நடித்துள்ளார். மேலும், ரெஜினா கசாண்ட்ரா, ஊர்வசி, துனியா விஜய், சுனில், கருடா ராம் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தமிழக ரசிகர்களைத் தாண்டி இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெறும் நோக்கில் ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2 – மஹாசக்தி’ திரைப்படம், வரும் நவம்பர் 6ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நம்பிக்கை, குடும்ப உறவுகள் மற்றும் உணர்வுப்பூர்வமான கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், பல்வேறு மொழி மற்றும் கலாச்சாரப் பின்னணிகளைக் கொண்ட ரசிகர்களையும் கவரும் எனப் படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.

இந்த வழிபாட்டு நிகழ்வின் ஒரு பகுதியாக, ஆலயத்திற்கு வருகை தந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், பெண்களுக்கு புடவைகளும் வழங்கப்பட்டன. பிரத்தியங்கிரா தேவி அம்மனின் அருளால் திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியடையவும், வேல்ஸ் நிறுவனத்தின் அடுத்தடுத்த திரைப்பட முயற்சிகள் வெற்றிபெறவும் படக்குழுவினர் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர்.

Mookuthi Amman 2Special Pooja at Temple for the Success of Mookuthi Amman 2Sundar C