புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையின் காரணமாக முடி உதிர்வைச் சந்திப்பவர்களுக்கு உதவும் நோக்கில், 800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்யும் பிரம்மாண்ட சாதனை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. லேடீஸ் சர்க்கிள் இந்தியா அமைப்பு மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியை இயக்குநரும் திரைப்படத் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சௌந்தர்யா ரஜினிகாந்த், தனது பாட்டியும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதன் காரணமாக முடி உதிர்வைச் சந்தித்ததை நேரில் பார்த்துள்ளதாகத் தெரிவித்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் முடி இழப்பால் எதிர்கொள்ளும் மனரீதியான சிரமங்களைத் தன்னால் புரிந்துகொள்ள முடிவதாகக் குறிப்பிட்ட அவர், அவர்களுக்கு உதவும் வகையில் முடிதானம் செய்வது மிகவும் பாராட்டுக்குரிய முயற்சி என்றும் தெரிவித்தார்.
- Advertisement -
மேலும், சமூக வலைதளங்களைப் பொழுதுபோக்கிற்காக மட்டுமின்றி, இதுபோன்ற நல்ல சமூகப் பணிகளுக்காகவும் பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். சமூக நலன் சார்ந்த நிகழ்வுகள் அதிக அளவில் மக்களைச் சென்றடையும் வகையில் அவற்றைச் சமூக வலைதளங்களில் பகிர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதுபோன்ற உன்னதமான முயற்சிகளுக்கு தன்னால் முடிந்த ஆதரவையும் தொடர்ந்து வழங்குவேன் என சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்தார். புற்றுநோயாளிகளின் நலனுக்காக 800-க்கும் மேற்பட்டோர் முடிதானம் செய்ய முன்வந்துள்ள இந்த முயற்சி பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.