நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘சொக்க வச்சாளே’ வெளியாகியுள்ளது. லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது.
மார்ஷல் ராபின்சன் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு மோகன் ராஜன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். ஹரிசரண், சைந்தவி மற்றும் நாராயணன் ரவிசங்கர் இணைந்து பாடியுள்ளனர். ஏற்கெனவே வெளியான ‘தங்கபுள்ள’ முதல் பாடல் தந்தை – மகன் இடையிலான பாசத்தையும் உணர்வுகளையும் வெளிப்படுத்திய நிலையில், தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பாடல் கணவன் – மனைவி இடையிலான காதல் மற்றும் ரொமான்ஸை மையமாகக் கொண்டுள்ளது.
மென்மையான இசையுடன் இனிமையான மெலடியாக உருவாகியுள்ள ‘சொக்க வச்சாளே’ பாடல், புதுமணத் தம்பதிகளின் காதல், அன்பு, நெருக்கம் மற்றும் அழகான இல்லற வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கும் வகையில் எந்தவித விரசமும் இல்லாமல் அழகான காட்சிகளுடன் இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கதையின் முக்கியத் திருப்பங்களையும் கதாபாத்திரங்களின் வாழ்க்கைப் பயணத்தையும் பாடலின் வழியாகவே வெளிப்படுத்தியிருப்பது சிறப்பம்சமாக அமைந்துள்ளது. லாரி ஓட்டுநராக இருக்கும் நாயகனுக்கும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த நாயகிக்கும் இடையே மலரும் காதல், பெற்றோரின் எதிர்ப்பை மீறி கோயிலில் திருமணம் செய்துகொள்வது என அவர்களின் வாழ்க்கைப் பயணம் பாடலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
- Advertisement -
ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள சிறிய கிராமத்து வீட்டில் புதுமணத் தம்பதிகள் தொடங்கும் வாழ்க்கை, அவர்களுக்கிடையேயான ரொமான்ஸ், நாயகி கர்ப்பமடையும் மகிழ்ச்சியான தருணம் என அழகாக நகரும் காட்சிகளுக்கு இடையே, நாயகியின் தாயிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் ஏற்படுத்தும் மாற்றங்களும் சுவாரசியமாக இடம்பெற்றுள்ளன. படத்தின் ஃப்ளாஷ்பேக் காட்சிகளையும் கதையின் முக்கியத் திருப்புமுனையையும் உள்ளடக்கிய பாடலாக இது அமைந்துள்ளது.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் உறவு, குடும்பப் பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.
‘தெனாவட்டு’ படத்திற்குப் பிறகு மீண்டும் முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் ஜீவா நடித்துள்ள இப்படத்தில், ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். K. குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு M. சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்புப் பணிகளைக் கவனிக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. மேலும், படப்பிடிப்பு மற்றும் தயாரிப்புப் பணிகள் நிறைவடைவதற்கு முன்பே சாட்டிலைட் உரிமையை ZEE தமிழ் நிறுவனமும், ஓடிடி உரிமையை ZEE5 நிறுவனமும் கைப்பற்றியுள்ளன.
வரும் டிசம்பர் 24-ம் தேதி வெளியாகவுள்ள ‘தகப்பன்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘சொக்க வச்சாளே’ இரண்டாவது சிங்கிள் பாடலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.