பெண் குழந்தைகளின் கனவுகளையும் குடும்ப ஆதரவையும் பேசும் ‘AOT’… துல்கர் சல்மான் நெகிழ்ச்சி!

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில், இயக்குநர் பவன் சதினேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ (AOT). கீதா ஆர்ட்ஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா நிறுவனங்கள் வழங்கும் இப்படத்தை லைட்பாக்ஸ் மீடியா சார்பில் சந்தீப் குன்னம் மற்றும் ரம்யா குன்னம் தயாரித்துள்ளனர். இதில் துல்கர் சல்மானுடன் நடிகை ஸ்ருதி ஹாசன் மற்றும் அறிமுக நடிகை சாத்விகா வீரவல்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப் பணிகள் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, நவம்பர் 17ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற தமிழ் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டு படம் குறித்த பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால் பேசுகையில், படத்தின் கதையும் அதன் நோக்கமும் தன்னை மிகவும் கவர்ந்ததாகத் தெரிவித்தார். எளிமையான வார்த்தைகளில், கதையோட்டத்திற்கு ஏற்ற வகையில் பாடல்களை எழுதியதாகக் குறிப்பிட்ட அவர், பெரிய கனவுகளைக் கொண்டிருப்பவர்களுக்கு நம்மால் முடிந்த ஆதரவை வழங்க வேண்டும் என்பதே இப்படத்தின் முக்கியமான நோக்கம் என்றார். இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பளித்த இயக்குநர் மற்றும் தயாரிப்புக் குழுவினருக்கும், தனக்கு ஆதரவளிக்கும் நண்பர் ஜி.வி. பிரகாஷுக்கும் நன்றி தெரிவித்தார்.

நடிகர் சின்னி ஜெயந்த் பேசுகையில், இயக்குநர் பவன் சதினேனி கதையை விவரித்த விதம் மிகவும் ஆச்சரியமளித்ததாகக் கூறினார். இப்படத்தில் இதுவரை ஏற்று நடிக்காத வித்தியாசமான பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும், பிளாஸ்மா, தொழில்நுட்பம், ஈர்ப்பு விசை என அறிவியல் சார்ந்த வசனங்களைப் பேசுவதற்குத் தனியாகத் தயாரானதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஜி.வி. பிரகாஷின் இசையைப் பாராட்டிய அவர், துல்கர் சல்மான் வெவ்வேறு மொழிகளில் நடித்தாலும் அந்தந்த மொழிகளில் அவரே டப்பிங் பேசுவது சிறப்பான விஷயம் என்றார். இப்படத்தின் கிளைமாக்ஸ் தன் மகன் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றபோது ஏற்பட்ட மகிழ்ச்சியை மீண்டும் நினைவுபடுத்தியதாகக் கூறினார். ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் குடும்பத்தினரின் ஆதரவு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் இப்படம், குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக்கூடிய படமாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

அறிமுக நடிகை சாத்விகா வீரவல்லி பேசுகையில், ‘AOT’ தனது முதல் திரைப்படம் என்பதால் மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிப்பதாகக் குறிப்பிட்டார். தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் தன் மீது நம்பிக்கை வைத்து முக்கியமான கதாபாத்திரத்தை வழங்கியதுடன், மேலும் இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பளித்ததற்கும் நன்றி தெரிவித்தார்.

துல்கர் சல்மான் போன்ற திறமையான நடிகருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம் என்றும், ஜி.வி. பிரகாஷின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றும் கூறினார். படப்பிடிப்பின்போது சின்னி ஜெயந்த் தனக்கு அளித்த அன்பையும் ஆதரவையும் நினைவுகூர்ந்த அவர், தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க விருப்பம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் பேசுகையில், ‘AOT’ படத்தின் கதையைக் கேட்டதுமே மிகவும் பிடித்துவிட்டதாகவும், திரைப்படத்தைப் பார்த்த பிறகு இந்திய சினிமாவின் முக்கியமான நவீன கிளாசிக் படங்களில் ஒன்றாக இது அமையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

துல்கர் சல்மானின் கதைத் தேர்வுகளை எப்போதும் வியந்து பார்ப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஏற்கெனவே ‘லக்கி பாஸ்கர்’ படத்தில் அவருடன் பணியாற்றிய அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார். மேலும், தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் தனது முதல் படமான ‘டார்லிங்’ மூலம் தன்னை நாயகனாக அறிமுகப்படுத்தியவர் என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

- Advertisement -

குடும்ப உறவுகள், சுய விழிப்புணர்வு உள்ளிட்ட முக்கியமான விஷயங்களைப் பேசும் இப்படம் ரசிகர்களிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இந்த ஆண்டில் வெளியான தனது படங்களின் பயணத்திற்கு ‘AOT’ சிறப்பான நிறைவாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் பேசுகையில், தான் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் என்றும், 23 வயதிலேயே தயாரிப்பாளராகத் தனது திரைப்பயணத்தைத் தொடங்கியதாகவும் தெரிவித்தார். ஆரம்பத்தில் சில படங்களைத் தயாரித்துவிட்டு வேறு தொழிலுக்குச் செல்லலாம் என நினைத்ததாகவும், ஆனால் தற்போது 50 ஆண்டுகளாகத் திரைத்துறையில் பயணித்து வருவதாகவும் கூறினார்.

2022ஆம் ஆண்டு இப்படத்தின் கதையைக் கேட்ட அரை மணி நேரத்திலேயே இதைத் தயாரிக்க வேண்டும் என முடிவு செய்ததாகத் தெரிவித்தார். ஒரு கிராமத்தில் பிறந்த சாதாரணப் பெண் காணும் கனவுகள், அவற்றை அடைய அவளுக்குக் கிடைக்கும் குடும்பத்தின் ஆதரவு ஆகியவற்றை அழகாகப் பேசும் ஊக்கமளிக்கும் திரைப்படமாக ‘AOT’ உருவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், இப்படத்தின் கதைக்கு புதுமுக நடிகை பொருத்தமாக இருப்பார் எனத் தேடியபோது சாத்விகா கிடைத்ததாகவும், அவரது நடிப்பு மற்றும் திரைத் தோற்றம் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் தெரிவித்தார். படம் வெளியாவதற்கு முன்பே அவருக்கு மேலும் இரண்டு தெலுங்குப் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் கூறினார்.

நடிகர் துல்கர் சல்மான் பேசுகையில், சென்னையும் தமிழ் ரசிகர்களும் தனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்றார். குறிப்பாக, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம் வெளியானபோது பத்திரிகையாளர்கள் அளித்த ஆதரவை ஒருபோதும் மறக்க முடியாது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

‘சீதா ராமம்’ படத்திற்குப் பிறகு இப்படத்தின் கதையைக் கேட்டதாகக் குறிப்பிட்ட அவர், ஆரம்பத்தில் கதாநாயகியை மையமாகக் கொண்ட படமாகத் தோன்றினாலும், கதையின் மீதான ஈர்ப்பால் இந்தப் படத்தைத் தவறவிடக் கூடாது என முடிவு செய்ததாகக் கூறினார். இது ஒரு குறிப்பிட்ட மொழிக்கான கதை கிடையாது என்றும் தெரிவித்தார்.

மேலும், படப்பிடிப்பின்போது அனைவரும் ஒரு குடும்பமாகப் பழகியதாகவும், டீசர் வெளியானபோது கிடைத்த வரவேற்பு தங்களையே ஆச்சரியப்படுத்தியதாகவும் கூறினார். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனக்கு ஒரு தம்பியைப் போன்றவர் என்றும், அவரது இசையின் மீதான அர்ப்பணிப்பு ஒவ்வொரு படத்திலும் வெளிப்படுவதாகவும் பாராட்டினார்.

அறிமுக நடிகை சாத்விகா குறித்து பேசுகையில், மிகவும் திறமையான நடிகை என்றும், முதல் படம் என்றே தோன்றாத அளவிற்கு சிறப்பாக நடித்திருப்பதாகவும் தெரிவித்தார். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த அவர், பொறியியல் படித்ததுடன் நிறுவனத்திலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்றும் குறிப்பிட்டார்.

இறுதியாக, இப்படம் பெண் குழந்தைகளின் கனவுகளையும், அவற்றை நனவாக்க குடும்பத்தினர் அளிக்க வேண்டிய ஆதரவையும் மையமாகக் கொண்டது எனக் கூறிய துல்கர் சல்மான், நம் வீட்டில் இருக்கும் மகள்கள், சகோதரிகள் மற்றும் பெண்களுக்காக இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்றும், படம் பிடித்திருந்தால் மற்றவர்களிடமும் பகிர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

வரும் நவம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ திரைப்படம், குடும்ப உறவுகள், கனவுகள் மற்றும் பெண்களின் முன்னேற்றம் குறித்து உணர்வுப்பூர்வமாகப் பேசும் படமாக இருக்கும் எனப் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

AOTDulquer SalmaanDulquer Salmaan Gets Emotional About ‘AOT’