எஸ்.ஜே.சூர்யாவின் செயல் தற்போது லைக்ஸ்களை குவித்து வருகிறது. இது பற்றிய நிகழ்வுகள் காண்போம்..
கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான ‘சரிபோதா சனிவாரம்’ படம் பெரும் வெற்றி பெற்றது. விவேக் ஆத்ரேயா இயக்கிய இந்த ஆக்ஷன் திரில்லர் படத்தில் நானி ஹீரோவாகவும், பிரியங்கா மோகன் ஹீரோயினாகவும் நடித்தனர். இதில் எஸ்.ஜே.சூர்யா ஏற்று நடித்த ஊழல் போலீஸ் அதிகாரி கேரக்டர் ரசிகர்களை கவர்ந்தது.
இப்படத்தில் வில்லனாக சிறப்பான நடிப்புக்கு எஸ்.ஜே. சூர்யாவுக்கு தெலங்கானா அரசு கத்தர் திரைப்பட விருதை வழங்கியது. இதற்காக நானி, தனது டுவீட்டில் ‘வாழ்த்துகள் சார். நீங்கள் இந்தப் படத்திற்கு சிறந்த துணை நடிகர் மட்டுமல்ல. நீங்கள்தான் எல்லாம். இந்த விருதுக்கு நீங்கள் முழு தகுதியானவர்’ என புகழ்ந்து பதிவிட்டிருந்தார்.
வேறொரு படப்பிடிப்பில் பிஸியாக இருந்த எஸ்.ஜே.சூர்யா ‘மிக்க நன்றி நானி சார்’ என்று மட்டும் பதிலளித்தார். பின்னர் தனது பதில் முழுமையாக இல்லை என்று எண்ணிய எஸ்.ஜே. சூர்யா, நானிக்கு மன்னிப்பு கேட்டு எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.
அதில் ‘அன்புள்ள நானி சார், மன்னிக்கவும். படப்பிடிப்பில் இருந்ததால், உங்கள் பாராட்டுக்கு உரிய பதில் அளிக்க இயலவில்லை. ‘நன்றி சார்’ என்று சொல்வது மட்டும் போதாது என்று எனக்குத் தெரியும்.
நீங்களும், இயக்குநர் விவேக்கும் எனக்கு ஆதரவாக இல்லாவிட்டால், இந்தப் பயணம் சாத்தியமில்லை. நீங்கள் திரையில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ. உங்கள் பாராட்டுக்கு மீண்டும் நன்றி’ என்று எழுதியிருந்தார். எஸ்.ஜே. சூர்யாவின் இந்தச் செயலுக்கு வலைத்தளங்களில் தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன.