“இந்திய கிராமங்களின் திறமைகளையும், உண்மையான இந்திய ஆன்மாவையும் பெரிய திரையில் கொண்டாடும் படம்தான் ‘பெத்தி’” என டெல்லி பத்திரிகையாளர் சந்திப்பில் ராம் சரண் உருக்கமாகப் பேசியுள்ளார்.
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள கிராமத்து விளையாட்டு பின்னணியிலான பிரம்மாண்ட திரைப்படம் “பெத்தி”, நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படம் வரும் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள பாடல்கள் ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. சமீபத்தில் வெளியான டிரெய்லரும், ஒரு கிராஸ் ஓவர் தடகள வீரரின் உணர்ச்சிப்பூர்வமான மற்றும் ஊக்கமூட்டும் பயணத்தை வலுவாக வெளிப்படுத்தி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
இப்படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளதுடன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், திவ்யேந்து சர்மா, ஜகபதி பாபு, போமன் இரானி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் வெளியீட்டை முன்னிட்டு “பெத்தி” படக்குழு நாடு முழுவதும் ரசிகர்களை சந்தித்து வருகிறது. போபாலில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவை தொடர்ந்து, தற்போது டெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்து கொண்டு பட அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய போமன் இரானி, “இந்திய கிராமங்களில் மறைந்து கிடக்கும் உண்மையான திறமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் படம் தான் ‘பெத்தி’. இந்த படத்தை பார்த்த பிறகு ஒவ்வொரு இளைஞரும் ‘பெத்தி’ போல ஆக வேண்டும் என்ற ஊக்கத்தை பெறுவார்கள். இந்திய விளையாட்டு துறையில் இருக்கும் திறமைகளுக்கு சரியான வாய்ப்புகளும் வழிகாட்டுதலும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை இந்த படம் உருவாக்கும்,” என்றார். மேலும், இந்த படம் இந்திய சினிமா வரலாற்றில் தனி இடம்பிடிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
திவ்யேந்து சர்மா பேசுகையில், “இவ்வளவு திறமையான கலைஞர்களுடன் ஒரே படத்தில் பணியாற்றியது பெருமையாக உள்ளது. ராம் சரண் உடன் நடித்த அனுபவம் மறக்க முடியாதது. ‘பெத்தி’ என்பது அடையாளத்திற்கான போராட்டத்தை சொல்லும் உயிர்ப்பான சர்வைவல் கதை,” என்றார்.
தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு, “என் முதல் தயாரிப்பாக இப்படம் உருவாகுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய கலாச்சார வேர்களை பேசும் உணர்ச்சிப்பூர்வமான மற்றும் விறுவிறுப்பான கதையாக ‘பெத்தி’ இருக்கும். குடும்பத்துடன் குழந்தைகளையும் அழைத்து வந்து இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.
நாயகி ஜான்வி கபூர், டெல்லியின் வெப்பத்தை நகைச்சுவையாக குறிப்பிட்டதுடன், தனது கதாபாத்திரம் இயக்குநர் புச்சி பாபு சனாவின் தனித்துவமான அணுகுமுறையால் தன்னை ஈர்த்ததாக கூறினார். மேலும் ராம் சரணின் அர்ப்பணிப்பு குறித்து, “கேமரா ஆஃப் ஆனதும் அமைதியாக இருப்பார். ஆனால் ஷாட் ஆரம்பித்தவுடன் திரையே அதிரும் அளவுக்கு ஆற்றலை வெளிப்படுத்துவார்,” என்று பாராட்டினார்.
மேலும், “இந்த படம் இந்தியாவின் புறக்கணிக்கப்பட்ட மக்களின் அடையாளப் போராட்டத்தை பேசும் ஒரு மாஸ் என்டர்டெய்னர். உண்மையான உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் நல்ல நோக்கத்துடன் இந்த படம் உருவாகியுள்ளது,” என்றும் கூறினார்.
ராம் சரண் தனது உரையில், “கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்த படத்திற்காக முழு மனதுடன் உழைத்துள்ளோம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை திரையரங்கிற்கு அழைத்து வந்து இந்த படத்தை பார்க்க வேண்டும். இந்திய மண்ணின் வாசனையுடன் உருவாகும் கதைகளே உலகளவில் கொண்டாடப்படுகின்றன. ‘பெத்தி’ அப்படிப்பட்ட ஒரு கதை,” என்றார்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த அனுபவத்தையும் பகிர்ந்துகொண்ட அவர், மேற்கு வங்கத்தை சேர்ந்த முகம்மது என்ற இளைஞர் தனது கிராமத்திலிருந்து மேலும் 80 பேரை இந்தியாவுக்காக விளையாட ஊக்குவித்த சம்பவத்தை பிரதமர் பகிர்ந்ததாக தெரிவித்தார். “அப்படிப்பட்ட உண்மையான இந்திய ஆன்மாவையும், கிராமத்து மக்களின் உறுதியையும் ‘பெத்தி’ படம் கொண்டாடுகிறது,” என்று கூறினார்.
தனது மாறுபட்ட தோற்றங்கள் குறித்து பேசுகையில், “ஒவ்வொரு கதாபாத்திர மாற்றமும் சவாலானது. குறிப்பாக மல்யுத்த வீரர் தோற்றம் மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் கதையின் தேவைக்காக அதை செய்தேன்,” என்றார்.
இறுதியாக, “உண்மையான இந்திய ஆன்மாவையும், போராட்ட மனப்பாங்கையும் கொண்ட ‘பெத்தி’ படத்தை உலகம் முழுவதும் ரசிகர்கள் திரையரங்குகளில் பார்த்து அனுபவிக்க வேண்டும்,” என்று ராம் சரண் அழைப்பு விடுத்தார்.
“பெத்தி” திரைப்படம் வரும் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.