பொங்கலுக்கு வெளியாகிறது பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’!

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டுவம்’. நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படம், பொங்கல் 2027 பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘தர்மன்’, ‘சேயோன்’ உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகும் எனத் தகவல்கள் பரவி வரும் நிலையில், ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு முதன்முதலாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் ‘World of Vettuvam’ வீடியோ ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியான இந்த வீடியோவிற்கு, தமிழில் இயக்குநர் பா.ரஞ்சித், இந்தியில் பங்கஜ் திரிபாதி, தெலுங்கில் ராணா டகுபதி, மலையாளத்தில் சௌபின் ஷாஹிர், கன்னடத்தில் கிச்சா சுதீப் ஆகியோர் குரல் கொடுத்திருந்தனர்.

- Advertisement -

அப்போகலிப்டிக் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம், வெவ்வேறு குழுக்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டிகள், மோதல்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களைக் கொண்ட கதைக்களத்தில் உருவாகியுள்ளது. மேலும், பாரம்பரியத் தற்காப்புக் கலைகளான அடிமுறை மற்றும் மல்லகம்ப் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு படத்தின் சண்டைக் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்காக நடிகர்கள் சிறப்புப் பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர்.

இப்படத்தில் ஆர்யா, அட்டக்கத்தி தினேஷ், ஷபீர், சோபிதா துலிபாலா, கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் கலை இயக்குநராக எஸ்.எஸ். மூர்த்தி, ஒளிப்பதிவாளராக ரூபேஷ் ஷாஜி, படத்தொகுப்பாளராக செல்வா ஆர்.கே., இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் குமார், சண்டைப் பயிற்சி இயக்குநராக திலீப் சுப்பராயன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள ‘வேட்டுவம்’ திரைப்படம், பிரம்மாண்டமான கதைக்களம் மற்றும் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் பொங்கல் 2027-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது.

AryaPa RanjithPa Ranjith’s Vettuvam Set for a Pongal 2027 ReleaseVettuvam