நடிகர் ஷாருக்கானின் ‘கிங்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ‘கிங்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘கொலையாளி அல்ல… நான் காதலன்!’ என்ற அதிரடியான வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்தப் போஸ்டர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

புதிய போஸ்டரில் ஷாருக்கானின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. உதடுகளுக்கு இடையே ரோஜாப்பூ, கைகளில் துப்பாக்கி, கண்களில் தீவிரம் என ஆக்‌ஷன் மற்றும் காதல் கலந்த தோற்றத்தில் அவர் காட்சியளிக்கிறார். ஆக்‌ஷன் திரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தில் ஷாருக்கானின் அதிரடியான அவதாரம் இடம்பெறவுள்ளதை இந்தப் போஸ்டர் உணர்த்துகிறது.

‘கொலையாளி அல்ல… நான் காதலன்!’ என்ற வாசகம் படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. ஷாருக்கானை இந்தப் புதிய அவதாரத்தில் திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஷாருக்கானுடன் சுஹானா கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோனே, அனில் கபூர், ராணி முகர்ஜி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நடிகை கரீனா கபூர் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சச்சித் பாலோஸ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அனிருத் மற்றும் சச்சின் – ஜிகர் இணைந்து இசையமைக்கின்றனர். பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகும் இப்படத்தை ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் மார்ஃபிளிக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் கௌரி கான், சித்தார்த் ஆனந்த், மம்தா ஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

வரும் டிசம்பர் 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள ‘கிங்’ திரைப்படம், புதிய போஸ்டர் வெளியீட்டால் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

‘பதான்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஷாருக்கான் – சித்தார்த் ஆனந்த் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதும், ஷாருக்கானின் மகள் சுஹானா கான் இப்படத்தின் மூலம் முழுநீளத் திரைப்படத்தில் அறிமுகமாவதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

KingNew Poster Released for Shah Rukh Khan’s Kingshah rukh khan