மித்துன் மாணிக்கம் நடிக்கும் ‘ஃபேமிலி பாய்’ படத்தின் டீசர் வெளியீடு!

நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் வெளியான ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகரும் இயக்குநருமான மித்துன் மாணிக்கம், தற்போது ‘ஃபேமிலி பாய்’ (Family Boy) திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் டீசரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

மித்துன் மாணிக்கம் இயக்கி, நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார், நிகிலா சங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவகுமார், சிவம், அருள் தாஸ், பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

உண்மைச் சம்பவத்தைத் தழுவி குடும்பக் கதையம்சத்துடன் கூடிய ஆக்‌ஷன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. மெக்கானிக் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் மித்துன் மாணிக்கம் தயாரித்துள்ளார். மில்லினியல்ஸ் மூவி புரொடக்ஷன் எல்.எல்.பி. சார்பில் முஹம்மத் கனி ஃபைசல் மற்றும் டாக்டர் கே. அருண் ஆறுமுகம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தைத் தமிழகம் முழுவதும் பலூன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

- Advertisement -

கார்த்திக் கே. கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு நிர்மல் ஜே.பி. இசையமைத்துள்ளார். ஜிஜேந்திரன்.வி படத்தொகுப்புப் பணிகளைக் கவனிக்க, சி.கே. முஜிபுர் ரஹ்மான் கலை இயக்கத்தை மேற்கொண்டுள்ளார்.

‘சிலப்பதிகாரத்தில் தொடங்கி சிங்காரச் சென்னை வரைக்கும், ஒரு பொருள் தொலையும்போது அதைத் தொலைத்தவனுக்குத்தான் அதன் வலி புரியும்’ என்ற வசனத்துடன் டீசர் தொடங்குகிறது. 2020-ஆம் ஆண்டு ஒரு குடும்பத்தில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

காணாமல் போன ஒரு பொருளைத் தேடி நாயகன் மேற்கொள்ளும் ஒருநாள் பயணத்தில் நிகழும் சுவாரசியமான சம்பவங்கள், எதிர்பாராத திருப்பங்கள் ஆகியவற்றை டீசர் வெளிப்படுத்துகிறது. இதன் பின்னணி இசையும் காட்சியமைப்பும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

‘ஃபேமிலி பாய்’ திரைப்படம் வரும் டிசம்பர் 11-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

Anitha SampathAnugraha S NambiarFamily BoyFamily Boy Teaser Out Mithun Manickam Stars in a Family Drama Action ThrillerM. SukumarMithun ManickamNikhila SankarPasanga SivakumarSaran Suthakaran