யூடியூப் உலகிலிருந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைக்கும் புதிய தலைமுறை கலைஞர்களின் வரிசையில் உருவாகியுள்ள ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படம், அறிவிக்கப்பட்ட நாள் முதலே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்கும் இந்தப் படத்தில் நடிகர் பாரத் கதாநாயகனாக அறிமுகமாகிறார். படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் பாரத் மற்றும் இயக்குநர் நிரஞ்ஜன் பட அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.
முதலில் ‘மாஸ்டர் பீஸ்’ எனப் பெயரிடப்பட்டிருந்த இந்தப் படம், அதே தலைப்பில் பிற மொழிகளில் திரைப்படங்கள் இருந்ததால் ‘மிஸ்டர் பாரத்’ என மாற்றப்பட்டது. இந்த தலைப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பரிந்துரைத்ததாகவும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிரபலமான படத் தலைப்பை பயன்படுத்துவதற்காக ஏ.வி.எம். ஸ்டுடியோஸ் நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அனுமதி பெறப்பட்ட பிறகே இறுதி செய்யப்பட்டதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் வழங்கும் இந்தப் படத்தை சுதன் சுந்தரம், லோகேஷ் கனகராஜ் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்தப் படம் மூலம் நடிகர் பாரத், கதாநாயகி சம்யுக்தா விஸ்வநாதன், இயக்குநர் நிரஞ்ஜன், இசையமைப்பாளர் பிரணவ் முனிராஜ், கலை இயக்குநர் பாவனா கோவர்தன் மற்றும் படத்தொகுப்பாளர் திவாகர் டெனிஸ் உள்ளிட்ட ஆறு புதிய திறமையாளர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகின்றனர்.
படம் குறித்து நடிகர் பாரத் கூறுகையில், “இதற்கு முன்பு ‘பிரின்ஸ்’, ‘லவ் டுடே’ போன்ற படங்களில் கதாநாயகனின் நண்பராக நடித்துள்ளேன். தற்போது முதல் முறையாக ஹீரோவாக அறிமுகமாகுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம். உலகம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில், சிரிப்பும் காதலும் கலந்த முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக ‘மிஸ்டர் பாரத்’ உருவாகியுள்ளது. ரசிகர்களின் ஆதரவே எங்களுக்கு மிகப்பெரிய பலம்” என்றார்.
மேலும், தாம் ஒரு பொம்மை தயாரிப்பு நிறுவனத்தில் குவாலிட்டி செக் அதிகாரியாக, மிகவும் அப்பாவியான இளைஞராக நடித்திருப்பதாகவும், தனது வாழ்க்கையில் ஏற்படும் காதல் மற்றும் குடும்ப உறவுகளே கதையின் மையமாக இருக்கும் என்றும் தெரிவித்தார். நடிகர் ஆர். சுந்தர்ராஜன் தாத்தா கதாபாத்திரத்தில் நடித்திருப்பதும் படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என்றார்.
கதாநாயகி சம்யுக்தா விஸ்வநாதன், டாய் டிசைனராக நடித்துள்ளார். சிறுவயதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் உறவுகள் குறித்து மாறுபட்ட பார்வை கொண்டிருக்கும் அவரது வாழ்க்கையில், பாரத்தின் தூய்மையான மனம் ஏற்படுத்தும் மாற்றமே படத்தின் உணர்வுப்பூர்வமான கதையாக அமைந்துள்ளது.
நிரஞ்ஜன் எழுதி இயக்கியுள்ள ‘மிஸ்டர் பாரத்’, நகைச்சுவை, காதல், குடும்ப உறவுகள் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்ட முழுநீள பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. இதில் பாரத், சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், நிதி பிரதீப், ஆர். சுந்தர்ராஜன், லிங்கா, ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழு விரைவில் வெளியிடவுள்ளது.