பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பில் மமிதா பைஜூ நடிக்கும் #PRS01 அறிமுக வீடியோ வெளியீடு!

நடிகராகவும், இயக்குநராகவும் தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி தமிழ் சினிமாவின் முக்கியமான இளம் படைப்பாளிகளில் ஒருவராக உருவெடுத்துள்ள பிரதீப் ரங்கநாதன், தற்போது தயாரிப்பாளராக புதிய பயணத்தை தொடங்கியுள்ளார். அவரது தயாரிப்பில் உருவாகும் #PRS01 திரைப்படத்தின் அறிமுக காணொளி அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தப் படத்தின் மூலம், பிரதீப் ரங்கநாதனுடன் பணியாற்றிய ஆறு உதவி இயக்குநர்கள் இணைந்து ‘தி ஆல்ஃபா யூனிட்’ என்ற பெயரில் இயக்குநர்களாக அறிமுகமாகின்றனர்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த திரைப்படத்தில் தென்னிந்தியாவின் முன்னணி இளம் நடிகை மமீதா பைஜு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் அஸ்வத் மாரிமுத்து, சிவாஜி சொன்டினேனி, சுவாசிகா, அனாமிகா மகி, லிசி ஆண்டனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தினேஷ்குமார் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க, பிரதீப் ராகவ் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். பி.ஆர். ஷோ நிறுவனம் சார்பில் பிரதீப் ரங்கநாதன் கதை எழுதி தயாரிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இந்த திரைப்படம் தற்போது #PRS01 என்ற தற்காலிக பெயரில் தயாராகி வருகிறது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிமுக காணொளியில் இடம்பெற்றுள்ள பின்னணி இசை, காட்சியமைப்பு மற்றும் கான்செப்ட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வுமன்-சென்ட்ரிக் கதைக்களத்துடன் உருவாகும் இப்படம், பிரதீப் ரங்கநாதனின் தயாரிப்பாளர் அவதாரமாகவும் கவனம் பெற்று வருகிறது.

மேலும், ‘டிராகன்’ படத்திற்குப் பிறகு மீண்டும் பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஸ்வத் மாரிமுத்து இணைந்திருப்பதும், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வரும் அஸ்வத் மாரிமுத்து இந்தத் திட்டத்தில் இடம்பெற்றிருப்பதும், #PRS01 திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

Ashwath MarimuthuMamitha BaijuMamitha Baiju to Lead Pradeep Ranganathan's ProductionPradeep Ranganathan