கல்வியின் முக்கியத்துவத்தை பேசும் ‘அருள்வான்’ திரைப்படம்!

90 பிக்சர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அருள்வான்’. இதில் நடிகர்கள் அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், பேபி கிருத்திகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு திரைப்படம் உருவான விதம், படப்பிடிப்பு அனுபவங்கள் மற்றும் கதையின் பின்னணி குறித்து பகிர்ந்து கொண்டனர்.

‘அருள்வான்’ திரைப்படத்தில் அருள்நிதி, ஆரவ், காளி வெங்கட், ரம்யா பாண்டியன், வி.டி.வி கணேஷ், ஜான் விஜய், பேபி கிருத்திகா, பருத்திவீரன் சரவணன், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். லால்குடி இளையராஜா கலை இயக்கத்தையும், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர்.

கல்வியின் அவசியத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை 90 பிக்சர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் சக்திவேலன் இப்படத்தை வழங்குகிறார்.

படப்பிடிப்பு பெரும்பாலும் மலைப்பகுதிகளில் கடினமான சூழ்நிலையில் நடைபெற்றதாக படக்குழுவினர் தெரிவித்தனர். சாலை வசதியில்லாத பகுதிகளில் கூடாரங்களில் தங்கி, இயற்கை சவால்களை எதிர்கொண்டு படப்பிடிப்பை முடித்ததாக நடிகர்கள் தெரிவித்தனர்.

நடிகர் காளி வெங்கட் பேசுகையில், மலைப்பகுதிகளில் நடைபெற்ற படப்பிடிப்பு மிகவும் சவாலான அனுபவமாக இருந்ததாகவும், ஆனால் இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அதை அற்புதமான காட்சிகளாக மாற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் பேசுகையில், “அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் குறித்து பேசும் இந்த திரைப்படம் சமூகத்திற்குத் தேவையான ஒரு கதையை எடுத்துச் சொல்கிறது. இப்படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு கதாபாத்திரமும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

நடிகை ரம்யா பாண்டியன் பேசுகையில், “கதையை கேட்ட பிறகு இந்த படத்தின் கருத்து எனக்கு மிகவும் பிடித்தது. கல்விக்கான வாய்ப்புகள் இல்லாமல் வாழும் மக்களின் வாழ்க்கையை இந்த படம் பதிவு செய்கிறது” என்றார்.

இயக்குநர் கணேஷ் விநாயகன் பேசுகையில், “இந்த திரைப்படம் சாதாரணமான படம் அல்ல. இதில் வலிகளும், உண்மையான மனிதர்களின் வாழ்க்கையும் உள்ளது. அருள்நிதி, ஆரவ் உள்ளிட்ட அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர்” என்றார்.

மேலும், “இந்த படத்தில் மூன்று முக்கிய கதாநாயகர்கள் உள்ளனர். அருள்நிதி, ஆரவ் மற்றும் பேபி கிருத்திகா. பேபி கிருத்திகாவின் பார்வையில் இந்த கதை நகரும்” என்றும் அவர் தெரிவித்தார்.

நடிகர் அருள்நிதி பேசுகையில், “இந்த படத்தின் கதை மற்றும் கதாபாத்திரம் என்னை மிகவும் ஈர்த்தது. மாவட்ட ஆட்சியர் முத்துவேல் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். குழந்தைகளுக்கான கல்வியின் முக்கியத்துவத்தை சொல்லும் இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.

நடிகர் ஆரவ் பேசுகையில், “இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரம் மீண்டும் கிடைக்குமா என்று தெரியாது என்பதால் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டேன். இந்த படம் சமூகத்திற்கு தேவையான ஒரு கருத்தை பேசுகிறது” என்றார்.

கடினமான சூழலில் உருவான ‘அருள்வான்’ திரைப்படம் வரும் 17ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

‘Arulvaan’ to Spotlight the Importance of EducationArulvaan