பழம்பெரும் இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவ் இயக்கத்தில், நாக் அஸ்வின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிங் கீதம்’ திரைப்படம் ஜூன் 11-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
படத்தின் வெளியீட்டை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், “மாயாபஜார் முதல் இன்று வெளியாகவுள்ள ‘சிங் கீதம்’ வரை சிங்கிதம் சாரிடம் எந்த மாற்றமும் இல்லை. சினிமா மீதான அவரது ஆர்வமும் படைப்பாற்றலும் இன்றும் அதேபோல இருக்கிறது. நான் 20 வயதில் கேட்ட கதையை, இன்று 70 வயதில் திரைப்படமாக பார்க்கப் போகிறேன் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
‘புஷ்பக விமானம்’, ‘மும்பை எக்ஸ்பிரஸ்’, ‘அபூர்வ சகோதரர்கள்’ போன்ற படங்கள் பேரார்வத்துடன் உருவானவை. அதே உணர்வுடன் ‘சிங் கீதம்’ உருவாகியுள்ளது. சிங்கிதம் சார் இப்போதும் Gen Z தலைமுறையினரைவிட முன்னோக்கிச் சிந்திக்கிறார். அவருடன் மீண்டும் உதவி இயக்குநராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவ் பேசுகையில், “‘சிங் கீதம்’ என் 40 ஆண்டுகால கனவு. வார்த்தைகளே பாடல்களாக மாறும் ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணமே இந்தக் கதையின் பிறப்புக்கு காரணம். இந்த கனவை நனவாக்கிய நாக் அஸ்வின் மற்றும் வைஜயந்தி மூவிஸுக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
இந்தப் படத்தின் வெற்றியும் பெருமையும் முழுவதும் நாக் அஸ்வினுக்கே சொந்தம். அவர் என்னை ஒரு தந்தையைப் போல மதித்து, இந்தப் படத்தை மிகுந்த அன்புடனும் மரியாதையுடனும் உருவாக்கினார்” என்றார்.
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தனது உரையில், “சிங்கிதம் சார் அளிக்கும் பாராட்டு எனக்கு ஆஸ்கர் விருது பெற்றதுபோல் உணர்வை தருகிறது. ‘சிங் கீதம்’ போன்ற படத்திற்கு இசையமைப்பது என் வாழ்க்கையில் கிடைத்த அரிய வாய்ப்புகளில் ஒன்று.
இந்தப் படத்தில் வரும் ஒவ்வொரு வசனத்தையும் பாடலாக மாற்றுவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஆனால் அதுவே எங்களுக்கு உற்சாகத்தையும் புதுமையான அனுபவத்தையும் கொடுத்தது. பார்வையாளர்களுக்கும் இந்த படம் ஒரு புதிய சினிமா அனுபவமாக இருக்கும்” என்று கூறினார்.
‘சிங் கீதம்’ திரைப்படத்தில் அயன், அஹல்யா பம்ரு, ஷாலினி கொண்டேபுடி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க இசை வழியாக கதையை சொல்லும் இந்த வித்தியாசமான முயற்சி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.