மத்திய அமைச்சர் எல்.முருகனுடன் திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி சந்திப்பு

‘சினிமாவின் ஆன்மா’ நூல் இந்தியாவின் 25 மொழிகளில் மொழிபெயர்க்கப்படும்: அமைச்சர் எல். முருகன் உறுதி!

கவிஞரும் திரைப்பட இயக்குநருமான சீனு ராமசாமி, மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகனை நேரில் சந்தித்து தனது ‘சினிமாவின் ஆன்மா (சிறார்கள் சினிமா ரசனைக் கல்வி)’ நூல் குறித்து விரிவாக கலந்துரையாடினார்.

உலகளவில் சிறந்த சிறார் திரைப்படங்களையும், இந்தியாவில் உருவான தரமான குழந்தைகள் திரைப்படங்களையும் ஒருங்கிணைத்து, சிறார்களுக்கு சினிமா ரசனையை ஒரு வாழ்வியல் கல்வியாக அறிமுகப்படுத்துவதே இந்த நூலின் முக்கிய நோக்கமாகும்.

சந்திப்பின் போது பேசிய சீனு ராமசாமி, “ஒரு குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்காக சிறு வயதிலேயே பல தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. அதுபோல மன ஆரோக்கியத்திற்கும், நல்ல ரசனை வளர்ச்சிக்கும் சினிமா ரசனைக் கல்வி அவசியமானது. இது குழந்தைகளின் சிந்தனையை செம்மைப்படுத்தி, தர்க்கபூர்வமான பார்வையுடன் வளர உதவும். கிராமப்புற மாணவர்களும் உலகத் தரமான சினிமாவை அறிந்து கொள்ள இந்தக் கல்வி வழிகாட்டியாக அமையும்” என்று வலியுறுத்தினார்.

சிறார் சினிமா கல்வி குறித்த அவரது பார்வையையும், நூலின் நோக்கத்தையும் ஆர்வமுடன் கேட்டறிந்த அமைச்சர் எல். முருகன், இந்த முயற்சியை பாராட்டினார். “இது நாட்டின் குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ள முயற்சி. இத்தகைய கல்வி எதிர்கால தலைமுறைக்கு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று கூறிய அவர், இந்த நூலை இந்தியாவின் முக்கிய 25 மொழிகளில் மொழிபெயர்க்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என உறுதியளித்தார்.

இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்த சீனு ராமசாமி, “சினிமா ரசனைக் கல்வி இந்தியா முழுவதும் சென்றடைய உதவும் இந்த முயற்சி, கோடிக்கணக்கான குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பயனளிக்கும். அதற்காக அமைச்சருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Film Director Seenu Ramasamy Meets Union Minister L. MuruganL. MuruganSeenu Ramasamy