இயக்குநர் வடிவுடையான் இயக்கத்தில், தமிழ் உள்ளிட்ட 12 மொழிகளில் உருவாகி வரும் ‘காக்கி முருகன்’ திரைப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடும் உரிமையை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
தமிழ் சினிமாவில் ‘மெர்சல்’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம், 100 படங்களுக்கு மேல் தயாரித்து, 150-க்கும் மேற்பட்ட படங்களை வெளியிட்ட அனுபவம் கொண்டது. தற்போது இந்த நிறுவனம் ‘காக்கி முருகன்’ திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ளது.
ஸ்ரீ வடிவுடையான் ஸ்டூடியோஸ் சார்பில், இயக்குநர் வடிவுடையான் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து இயக்குகிறார். இப்படத்திற்கான கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இசையையும் அவரே கவனிக்கிறார்.
தமிழ் சினிமாவில் இதுவரை காணாத வகையில் அதிரடி, திரில்லர் மற்றும் மர்மம் நிறைந்த அனிமல் ஓரியண்டட் திரைப்படமாக ‘காக்கி முருகன்’ உருவாகி வருகிறது. ஒரு முரட்டுத்தனமான போலீஸ் அதிகாரி, உலகெங்கும் தடை செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்படும் ஐந்து பிட்புல் நாய்கள் மற்றும் முருகக் கடவுள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட் படங்களுக்கு நிகரான தொழில்நுட்ப நேர்த்தியுடன், இந்திய சினிமா இதுவரை பார்த்திராத புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் வகையில் இப்படம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது. திரையரங்குகளில் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் அதிரடி திரில்லர் படமாக இது இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.
- Advertisement -
இந்திய சினிமாவை உலக அரங்கில் கொண்டு செல்லும் முயற்சியாக, தமிழ் மட்டுமின்றி உலகின் முன்னணி 12 மொழிகளில் இப்படத்தை ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான உலகளாவிய விநியோக உரிமையை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளதால், சர்வதேச அளவில் இப்படம் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
இப்படத்தில் விஜய் சத்யா அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக முன்னணி நடிகை ரித்திகா சென் நடிக்கிறார். மேலும், பல முக்கிய நடிகர்கள் இப்படத்தில் இணைவது குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக இடம்பெறும் ஐந்து பிட்புல் நாய்களுக்கு தற்போது சர்வதேச தரத்திலான சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இப்படத்திற்கு ஆர். பிரணவ் ஒளிப்பதிவு செய்கிறார். சண்முகம் கலை இயக்கத்தையும், யுகபாரதி பாடல்களையும், ஓம் பிரகாஷ் சண்டைப் பயிற்சியையும் கவனிக்கின்றனர். பிஜு டான் பாஸ்கோ படத்தொகுப்பாளராகவும், தினேஷ் நடன இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். ஜி. சங்கர் தயாரிப்பு மேற்பார்வையையும், நா. விஜயமுரளி மக்கள் தொடர்பையும், வி. உமாராணி இணை தயாரிப்பையும் கவனிக்கின்றனர்.
‘பொட்டு அம்மன்’, ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’, ‘பாம்பாட்டம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய வடிவுடையான், தற்போது ‘காக்கி முருகன்’ படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது.