அம்மா – இரட்டை குழந்தைகள் உறவை மையமாகக் கொண்ட சைக்கலாஜிகல் திரில்லர்… ஜூன் 5-ல் திரைக்கு வரும் ‘இரட்டையர்’!
Asia Iconic Studios தயாரிப்பில், ராஜேஸ்வரி லக்ஷ்மிநாராயணன் மற்றும் வினோத் கண்ணன் தயாரித்துள்ள ‘இரட்டையர்’ திரைப்படம், வரும் ஜூன் 5-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அறிமுக இயக்குநர் ஜெகதீஷ் இயக்கியுள்ள இந்தப் படம், சைக்கலாஜிகல் திரில்லர் பாணியில் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான பல த்ரில்லர் படங்களிலிருந்து மாறுபட்டு, ஒரு தாயும் அவரது இரட்டை பெண் குழந்தைகளும் இடையே உருவாகும் மர்மமான உறவை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
கதையின் மையத்தில், ஒரு விபத்தில் தந்தை உயிரிழக்கிறார். அதே விபத்தில் தாயின் முகமும் கடுமையாக சேதமடைகிறது. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பும் தாயின் நடத்தை நாளுக்கு நாள் விசித்திரமாக மாற, அவரது இரட்டை மகள்களின் வாழ்க்கை அச்சம் நிறைந்ததாக மாறுகிறது. இதன் பின்னணியில் இருக்கும் உண்மையை கண்டறிய அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளும், அதன்பிறகு நடைபெறும் திகில் சம்பவங்களும் படத்தின் சுவாரஸ்யமான கதைக்களமாக அமைந்துள்ளன.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோதே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. உயிர் பயத்தில் கதவை மூட முயலும் இரட்டை குழந்தைகள், மறுபுறம் கோபத்துடன் கதவைத் திறக்க முயலும் தாய் என அமைந்த காட்சி படத்தின் மர்மத் தன்மையை வெளிப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து வெளியான டிரெய்லரும் திகில் மற்றும் பரபரப்பை ஒருங்கே வெளிப்படுத்தி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப்படத்தில் தாயாக அபிநயா நடித்துள்ள நிலையில், இரட்டை குழந்தைகளாக அனுமிதா மற்றும் அனுஷிதா நடித்துள்ளனர். மேலும் சுப்ரமணிய சிவா, சங்கீதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
திட்டக்குடி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் நடைபெற்ற படப்பிடிப்பு வெறும் 21 நாட்களில் நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், தற்போது படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது.
வித்தியாசமான கதை, சைக்கலாஜிகல் த்ரில், திகில் நிறைந்த காட்சிகள் மற்றும் பரபரப்பான திரைக்கதையுடன் உருவாகியுள்ள ‘இரட்டையர்’, ரசிகர்களுக்கு புதுமையான ஹாரர்-த்ரில்லர் அனுபவத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
தொழில்நுட்பக் குழு:
கதை, திரைக்கதை, இயக்கம்: ஜெகதீஷ்
தயாரிப்பாளர்கள்: ராஜேஸ்வரி லக்ஷ்மிநாராயணன், வினோத் கண்ணன்
இணை தயாரிப்பாளர்: ஹரிஹரன்
வசனம்: பால பாரதி
ஒளிப்பதிவு: முகமது அமீன்
இசை: GKV
படத்தொகுப்பு: ஈஸ்வரா மூர்த்தி
கலை இயக்கம்: பிரபாகரன் ராகுல்
நிர்வாக தயாரிப்பாளர்: பாலச்சந்தர்
தயாரிப்பு மேலாளர்: பிரதீப் மிதுல்
மக்கள் தொடர்பு: மணி மதன்