‘ஆன்லைன் விமர்சனங்களை பார்ப்பதில்லை’ என தெரிவித்துள்ளார் ‘ரெட்ரோ’ இயக்குனர். இது பற்றி அவர் கூறிய தகவல்கள் காண்போம்..
‘கங்குவா’ தோல்விக்கு பின்னர் ‘ரெட்ரோ’ தந்த வெற்றியால் சூர்யா உள்பட படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில், கார்த்திக் சுப்பராஜ் கூறும்போது, ‘ஆன்லைன் விமர்சனங்களை பார்க்கக்கூடாது என்பதை ‘ரெட்ரோ’ படத்தின் மூலம் உணர்ந்து கொண்டேன். காரணம், அதில் நிறைய அஜெண்டாக்கள் உள்ளே கொண்டு வரப்படுகிறது.
நான் எல்லா ஆன்லைன் விமர்சனங்களையும் சொல்லவில்லை. சில விமர்சனங்களை பார்க்கும்போது, அது நேர்மையாக இருக்கிறதா இல்லையா என்று தெரியும்.
ஒரு படம் என்று வரும்போது 150 முதல் 200 பேர் வரை பணிபுரிகிறோம். அவர்கள் அனைவருக்கும் அந்தப் படம் வெளியாவது என்பது ஒரு கனவு. படம் அனைவருக்கும் பிடிக்கும்போது அது ஒருவித மகிழ்ச்சியை தருகிறது. ஆனால், அவர்களை மகிழ்ச்சியாகவே இருக்க விடக்கூடாது என்பதுபோல, சில விமர்சனங்கள் இருக்கின்றன.
நாம் ஜெயித்தோமா இல்லையா என்பதை மற்றவர்கள் சொல்லக் கூடாது. நாம் தான் சொல்லவேண்டும். படத்துக்கு ஆடியன்ஸ் எப்படி ரியாக்ட் செய்கிறார்கள் என்பதுதான் முக்கியம். அதைத்தான் இந்த படத்திலிருந்து நான் முடிவு செய்துள்ள விஷயம்’ என தெரிவித்துள்ளார்.