தமிழ் சினிமாவில் இன்னும் நிறைய படங்கள் செய்ய வேண்டும்! – ‘எங்கள் தங்கம்’ விழாவில் மனம் திறந்த சமந்தா

நடிகை சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘எங்கள் தங்கம்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை சத்யம் திரையரங்கில் உற்சாகமாக நடைபெற்றது. “This GOLD is BLOODY BOLD” என்ற அதிரடியான டேக் லைனுடன் உருவாகியுள்ள இப்படம், வரும் ஜூன் 19, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பிரபல படைப்பாளரும் தயாரிப்பாளருமான ராஜ் நிடிமொரு உருவாக்கத்தில், இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்தப் படத்தை ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ராஜ் நிடிமொரு, சமந்தா மற்றும் ஹிமாங்க் ரெட்டி துவ்வுரு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட படக்குழுவினர், திரைப்படம் குறித்த பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

“சமந்தாவின் ஆக்‌ஷன் அவதாரம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்” – ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்

படம் குறித்து பேசிய ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், “நந்தினி ரெட்டி இயக்கத்தில், சமந்தாவை மையமாகக் கொண்டு உருவாகும் படம் என்று கேட்டவுடன் எனக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. வழக்கமாக காதல் மற்றும் குடும்பக் கதைகளுக்குப் பெயர் பெற்ற நந்தினி ரெட்டி, இந்த முறை முற்றிலும் மாறுபட்ட உலகத்தை உருவாக்கியுள்ளார்.

குறிப்பாக சமந்தா இதுவரை இல்லாத அளவிற்கு ஹார்ட்கோர் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்துள்ளார். அவரது அர்ப்பணிப்பும் உழைப்பும் எங்களை வியக்க வைத்தது. டிரெய்லரில் நீங்கள் பார்த்த அதிரடியும் விறுவிறுப்பும் முழுப் படத்திலும் தொடரும். ரசிகர்களுக்கு இது ஒரு சிறப்பான திரையரங்கு அனுபவமாக இருக்கும்” என்றார்.

“இது உமன் பவர் அல்ல… டாலண்ட் பவர்!” – கௌதமி

நடிகை கௌதமி பேசுகையில், “ஒரு நல்ல திரைப்படத்தின் மூலம் ரசிகர்களைச் சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சி தரும். ‘எங்கள் தங்கம்’ அதுபோன்ற ஒரு சிறப்பான படம்.

இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் மிகவும் இனிமையானது. படப்பிடிப்பு எப்போது தொடங்கி எப்போது முடிந்தது என்பதே தெரியவில்லை. இந்தப் படத்தை ஒப்புக்கொண்டதற்கு முக்கியக் காரணம், இதன் பின்னால் இருந்த மனிதர்கள் தான்.

சமந்தாவும் நந்தினி ரெட்டியும் மிகுந்த தன்னம்பிக்கையும் திறமையும் கொண்டவர்கள். பலர் இதை ‘உமன் பவர்’ எனக் கூறலாம். ஆனால் எனது பார்வையில் இது ‘டாலண்ட் பவர்’. இந்தப் படத்தின் வெற்றிக்கு காரணம் இதில் பணியாற்றிய அனைவரின் திறமையும் அர்ப்பணிப்பும்தான்.

சமந்தாவுக்கும் நந்தினி ரெட்டிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். ‘எங்கள் தங்கம்’ நிச்சயமாக அனைவரையும் கவரும் அழகான திரைப்படமாக இருக்கும்” என்றார்.

“சென்னை என் வீடு… தமிழ் சினிமாவில் இன்னும் நிறைய நடிக்க வேண்டும்” – சமந்தா

நிகழ்ச்சியின் முக்கிய ஈர்ப்பாக இருந்த நடிகை சமந்தா, தனது உரையில் தமிழ்ச் சினிமா மீதான பாசத்தை வெளிப்படுத்தினார்.

“சென்னைக்கு வருவது எப்போதுமே வீட்டிற்கு வருவது போன்ற உணர்வை தருகிறது. சத்யம் திரையரங்கம் இருக்கும் இந்தப் பகுதி எனக்கு மிகவும் நெருக்கமானது. கல்லூரி நாட்களில் நான் இங்கேயே வாழ்ந்திருக்கிறேன்.

எனக்கு எப்போதுமே ஒரு வருத்தம் உண்டு. தமிழ் சினிமாவில் இன்னும் நிறைய படங்களில் நடித்திருக்க வேண்டும் என்று அடிக்கடி நினைப்பேன். அந்த ஆசை இன்னும் இருக்கிறது. நல்ல கதைகளும், நல்ல கதாபாத்திரங்களும் வந்தால், தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க விரும்புகிறேன்.

பல ஆண்டுகளாக அதிக தமிழ் படங்கள் செய்யவில்லை. இருப்பினும் ரசிகர்களின் அன்பும் ஆதரவும் குறையவில்லை. அதற்காக நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன்,” என்றார்.

மேலும், தயாரிப்பாளராக பணியாற்றிய அனுபவம் குறித்தும் பேசிய அவர், “ஒரு திரைப்படத்தை உருவாக்குவதும், அதை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதும் எவ்வளவு கடினம் என்பதை இந்தப் படம் எனக்கு உணர்த்தியது. குறிப்பாக இறுதிக்கட்ட பணிகள் மிகவும் சவாலாக இருந்தன. ஆனால் அந்த உழைப்பின் பலனாக ஒரு நல்ல படத்தை உருவாக்கியுள்ளோம் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

ஜூன் 19-ல் உலகம் முழுவதும் ரிலீஸ்

குடும்பம், உணர்வுகள், அதிரடி மற்றும் வித்தியாசமான கதைக்களம் ஆகியவற்றை இணைத்து உருவாகியுள்ள ‘எங்கள் தங்கம்’, இந்த கோடையின் முக்கிய வெளியீடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

படத்திற்கு ஒளிப்பதிவை ஓம் பிரகாஷ் ISC மேற்கொண்டுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள நிலையில், திரைக்கதையை ராஜ் நிடிமொரு மற்றும் வசந்த் மாரிங்கண்டி இணைந்து எழுதியுள்ளனர். கூடுதல் திரைக்கதையை பிரகாஷ் பொப்புடி கவனித்துள்ளார்.

சீதா ஆர். மேனன் நிர்வாக மேற்பார்வை செய்துள்ள இந்தப் படத்திற்கு, தர்மேந்திர ககராலா படத்தொகுப்பும், உல்லாஸ் ஹைடூர் கலை இயக்கமும் மேற்கொண்டுள்ளனர். சர்வதேச புகழ்பெற்ற லீ விட்டேக்கர் மற்றும் ஏஜாஸ் குலாப் ஆகியோர் அதிரடி காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.

சமந்தாவின் புதிய தோற்றம், அதிரடியான கதாபாத்திரம் மற்றும் படத்தின் வித்தியாசமான கான்செப்ட் ஆகியவை ரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ‘எங்கள் தங்கம்’ திரைப்படம் ஜூன் 19, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Engal ThangamGautamiOm PrakashSamanthaசமந்தா