பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படமான ‘லவ்வர் பாய்’ அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளது. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக முன்னணி நடிகை கிருத்தி ஷெட்டி நடிக்கிறார்.
இந்தப் படத்தை இயக்குநர் அட்லியின் முன்னாள் உதவி இயக்குநரான அசோக் இயக்குகிறார். இதன் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமாகிறார். காதல், உணர்வுகள் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தத் திரைப்படம், தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற சிறப்பு பூஜையுடன் படப்பிடிப்பு பணிகள் தொடங்கப்பட்டன. விழாவில் இயக்குநர்கள் ஷங்கர், ஏ.ஆர். முருகதாஸ், எச். வினோத், மதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தயாரிப்பாளர்கள் லலித் குமார், 5 ஸ்டார் செந்தில், ஜீ ஸ்டுடியோஸின் அக்ஷய் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.
- Advertisement -
மேலும், நடிகர்கள் அபிஷன் ஜீவிந்த், பாரத், ராஜு ஜெயமோகன், தேவ், அஜய் கார்த்தி, அதிதி ஷங்கர் உள்ளிட்ட பலரும் விழாவை சிறப்பித்தனர். இயக்குநராக அறிமுகமாகவுள்ள ஜேசன் சஞ்சயும் தனது படப்பணிகளுக்கிடையில் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார்.
படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் சுதன் சுந்தரம், “புதிய திறமையாளர்களையும் வித்தியாசமான கதைகளையும் தொடர்ந்து ஆதரிப்பது பேஷன் ஸ்டுடியோஸின் நோக்கம். ‘லவ்வர் பாய்’ கதையை கேட்டவுடன் இயக்குநர் அசோக்கின் திறமை மற்றும் கதை சொல்லும் விதம் எங்களை கவர்ந்தது. அர்ஜித் ஷங்கர் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்படும் இளம் நடிகர். கிருத்தி ஷெட்டி ஏற்கனவே தனது திறமையை நிரூபித்த நடிகை. இவர்களின் கூட்டணி ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும்” என்று தெரிவித்தார்.
நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவின் முழுமையான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. அறிவிப்பிலேயே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘லவ்வர் பாய்’, இளம் தலைமுறையினருக்கான முக்கியமான காதல் திரைப்படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.