திரிஷ்யம் 3 படத்தின் தெலுங்கு ஓடிடி வெளியீட்டிற்கு இடைக்காலத் தடை

மலையாள திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தின் தெலுங்கு மொழி வெளியீட்டைச் சுற்றி சட்டப்பூர்வ சர்ச்சை உருவாகியுள்ளது. இதையடுத்து, திரைப்படத்தின் தெலுங்கு ஓடிடி வெளியீட்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மோகன்லால், மீனா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். இப்படத்தின் தெலுங்கு மொழி ரீமேக் மற்றும் வெளியீட்டு உரிமைகள் தொடர்பாக, ஸ்ரீப்ரியா சேதுபதி மற்றும் ராஜ்குமார் சேதுபதி தலைமையிலான ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

தங்களே ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தின் தெலுங்கு மொழி உரிமைகளின் முழுமையான மற்றும் பிரத்யேக உரிமையாளர்கள் எனக் கூறியுள்ள ராஜ்குமார் தியேட்டர்ஸ், அந்த உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

மனுவில், ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனத்தின் எம்.ஜே. ஆண்டனி, இயக்குநர் ஜீத்து ஜோசப், பனோரமா ஸ்டுடியோஸ், பென் ஸ்டுடியோஸ் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய எந்த நபர் அல்லது நிறுவனமும், ‘திரிஷ்யம் 3’ படத்தை தெலுங்கு மொழியில் தயாரிப்பது, மறுஆக்கம் செய்வது, விநியோகிப்பது அல்லது வெளியிடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என நிரந்தரத் தடை உத்தரவு கோரப்பட்டுள்ளது.

கடந்த மாதம் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ராஜ்குமார் தியேட்டர்ஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கே. ரவி ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். இதையடுத்து, எதிர்மனுதாரர்கள் மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், வழக்கு நிலுவையில் உள்ள சூழலில் ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தை தெலுங்கு மொழியில் ஓடிடி தளங்களில் வெளியிடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இந்த வழக்கில் அடுத்தகட்ட உத்தரவு வெளியாகும் வரை வெளியீட்டுக்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது எனவும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

இதுகுறித்து ராஜ்குமார் தியேட்டர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தின் தெலுங்கு படைப்பாக்கம் அல்லது வெளியீட்டு உரிமைகள் தொடர்பாக யாரேனும் ஒப்பந்தம் அல்லது வணிக ரீதியான உடன்படிக்கைகளில் ஈடுபட்டால், அது அவர்களின் சொந்தப் பொறுப்பிலேயே அமையும். அத்தகைய அனைத்து ஒப்பந்தங்களும் சென்னை உயர் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டதாகவே கருதப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு காரணமாக, ‘திரிஷ்யம் 3’ படத்தின் தெலுங்கு மொழி வெளியீடு மற்றும் அதனைச் சார்ந்த வணிக நடவடிக்கைகள் தற்போது சட்ட ரீதியான கண்காணிப்பின் கீழ் வந்துள்ளன.

Asha SharathDinesh PrabhakarDrishyam 3Interim Stay on Telugu OTT Release of Drishyam 3Jeethu JosephmohanlalVeena Nandakumar