லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி, ‘சிக்மா’ படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
விழாவில் பேசிய தயாரிப்பாளர் தமிழ்குமரன், ஜேசன் சஞ்சய்யை இயக்குநராக அறிமுகப்படுத்துவதில் லைகா நிறுவனத்திற்கு இருக்கும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். நடிகர் விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படத்தின் மூலம் லைகா திரைத்துறையில் அறிமுகமானதை நினைவுகூர்ந்த அவர், தற்போது விஜய்யின் மகனை இயக்குநராக அறிமுகப்படுத்துவது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். மேலும், ஜேசன் சஞ்சய்யின் கடின உழைப்பையும் பாராட்டினார்.
பாடலாசிரியர் விவேக், ஜேசன் சஞ்சய் சிறந்த கதை சொல்லி என்றும், அவர் நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றியுள்ளதாகவும் பாராட்டினார். பாடலாசிரியர் சூப்பர் சுப்பு, ‘சிக்மா’ என்றால் யாருடைய உதவியும் இல்லாமல் தனது சொந்த முயற்சியில் வெற்றி பெறுபவர் என குறிப்பிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
நடிகர்கள் அன்புதாசன், சம்பத், ஷிவ் பண்டிட், ராஜூ சுந்தரம் உள்ளிட்டோரும் படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம், நடிகர் விஜய்யின் பல திரைப்படங்களை விநியோகம் செய்ததை நினைவுகூர்ந்து, தற்போது ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாவதற்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு முழுவதும் ‘சிக்மா’ திரைப்படத்தை விநியோகம் செய்வதாகவும் தெரிவித்தார்.
தயாரிப்பாளர் தாணு பேசுகையில், நடிகர் விஜய்யின் பல படங்களை தயாரித்துள்ள நிலையில், தற்போது அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாவது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். அவர் இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தினார்.
நடிகர் விக்ராந்த், ‘சிக்மா’ தனக்கு மிகவும் ஸ்பெஷலான படம் என்று குறிப்பிட்டார். சிறு வயதில் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டிருந்த ஜேசன் சஞ்சய் தற்போது இயக்குநராக தனது பயணத்தை தொடங்கியிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், இப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தரும் என வாழ்த்தினார்.
- Advertisement -
நடிகை ஃபரியா அப்துல்லா, லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜேசன் சஞ்சய் மூலம் தமிழில் அறிமுகமாவது பெருமையாக இருப்பதாக தெரிவித்தார். சந்தீப் கிஷன், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்த அவர், ‘சிக்மா’ படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என கூறினார்.
நடிகர் சூரி பேசுகையில், ஜேசன் சஞ்சய்க்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் அவர் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தியதுடன், எதிர்காலத்தில் ஜேசன் சஞ்சய் ஹீரோவாகவும் நடிக்க வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்தார்.
நடிகர் சந்தீப் கிஷன், ‘சிக்மா’ திரைப்படம் தன்னுடைய திரைப்பயணத்தில் முக்கியமான படமாக இருக்கும் என தெரிவித்தார். ஜேசன் சஞ்சய்யின் முதல் படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய அவர், சுய அடையாளத்திற்காக போராடும் பலரின் கதையாக ‘சிக்மா’ உருவாகியுள்ளதாக தெரிவித்தார். மேலும், இசையமைப்பாளர் தமனுடன் இணைந்து பணியாற்றுவது இது நான்காவது படம் என்றும், திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி வெளியாகிறது என்றும் குறிப்பிட்டார்.
இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேசுகையில், “நம் எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு ‘சிக்மா மொமண்ட்’ இருக்கும். படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு தேவை, சிக்கல் இருக்கும். அந்த சூழலில் அவர்கள் எடுக்கும் ஒரு முடிவு அவர்களின் வாழ்க்கையையே மாற்றுகிறது. அதுதான் ‘சிக்மா’” என்றார்.
மேலும், தனது 22-வது வயதில் கதையை தயாரிப்பாளர் சுபாஸ்கரனிடம் கூறியதாகவும், தன் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி என்றும் தெரிவித்தார். தயாரிப்பாளர் தமிழ்குமரன், நடிகர் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவித்தார்.
தமன் இசையமைத்துள்ள இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஷான் ரோல்டன் உள்ளிட்டோர் பாடல்களை பாடியுள்ளனர். பிரவீன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.