மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சத்யபாமா பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
ஸ்டார் ஸ்டுடியோ18 மற்றும் இயக்குநர் அட்லி வழங்கும் இப்படத்தை ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் மற்றும் சினி1 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன. முராத் கெதானி, பிரியா அட்லி, அலோக் ஜெயின் மற்றும் அஜித் அந்தாரே ஆகியோர் தயாரிப்பாளர்களாக இணைந்துள்ளனர்.
அக்டோபர் 1-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘பத்தா’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே அதிகரித்துள்ள நிலையில், இசை வெளியீட்டு விழாவும் கோலாகலமாக நடைபெற்றது. படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் என ஏராளமானோர் இதில் கலந்துகொண்டனர்.
விஜய் சேதுபதி – பாலாஜி தரணிதரன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருப்பது இப்படத்தின் முக்கிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாக உள்ளது. ஏற்கனவே ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மற்றும் ‘சீதக்காதி’ ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றிய இந்தக் கூட்டணி, மீண்டும் இணைந்துள்ளதால் ‘பத்தா’ படத்தின் கதை மற்றும் உருவாக்கம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
விழாவில் பேசிய பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, ‘பத்தா’ தனக்கு மிகவும் நெருக்கமான படம் என்றும், வாழ்க்கையைப் புரிந்துகொண்டு அன்புடனும் அறிவுடனும் பயணிக்கும் மனிதர்களுக்கான விழிப்புணர்வை இப்படம் பேசும் என்றும் தெரிவித்தார். இயக்குநர் பாலாஜி தரணிதரனுடனான தனது நீண்டகால உறவை நினைவுகூர்ந்த அவர், வாழ்க்கையில் கடினமான சூழலில் இருந்தபோது தன்னை அரவணைத்து மீண்டும் எழுத வைத்தவர் பாலாஜி என்றும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.
பாடலாசிரியர்கள் தமிழ் மற்றும் கானா ஜானி ஆகியோர் தங்களது முதல் ஆடியோ வெளியீட்டு விழா அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டனர். ‘பத்தா’ படத்துக்காக வித்தியாசமான முறையில் பாடல்கள் எழுதும் வாய்ப்பு கிடைத்தது தங்களுக்கு புதிய கற்றல் அனுபவமாக இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
கலை இயக்குநர் முத்துராஜ் பேசுகையில், 80-களின் சென்னையை மையமாகக் கொண்ட தனித்துவமான உலகம் இப்படத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். படத்திற்காக அக்காலகட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு பொருட்கள் மற்றும் props-கள் பல மாதங்கள் உழைத்து உருவாக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
எடிட்டர் ஆர். கலைவாணன், ‘பத்தா’ தனது முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக இருந்ததாகவும், ஒவ்வொரு காட்சியையும் கவனமாக அணுகி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார். அட்லியுடன் உதவி எடிட்டராக பணியாற்றிய தனது அனுபவங்களையும் அவர் நினைவுகூர்ந்தார்.
ஒளிப்பதிவாளர் செல்வகுமார் பேசுகையில், இயக்குநர் பாலாஜி தரணிதரனின் பார்வைக்கு ஏற்ப ‘பத்தா’வின் உலகம் உருவாக்கப்பட்டதாக தெரிவித்தார். விஜய் சேதுபதியின் நடிப்பை பாராட்டிய அவர், பல டேக்குகள் சென்றபோதும் முழு ஈடுபாட்டுடன் அவர் நடித்ததாகக் கூறினார். லிஜோமோல் ஜோஸின் நடிப்பையும் அவர் வெகுவாகப் பாராட்டினார்.
தயாரிப்பாளர் அஜித் அந்தாரே, தமிழ் சினிமாவிடம் இருந்து தாங்கள் தொடர்ந்து கற்றுக்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். பாலாஜி தரணிதரனின் கதையை கேட்டபோதே ‘பத்தா’வின் உலகம் தங்களை வெகுவாக கவர்ந்ததாகவும், மொழியைத் தாண்டி அந்தக் கதை தங்களை உணர வைத்ததாகவும் குறிப்பிட்டார்.
தயாரிப்பாளர் முராத் கெதானி, ‘பத்தா’ சினி1 ஸ்டுடியோஸின் முதல் தமிழ் படம் என்பதால் தனக்கு மிகவும் முக்கியமான படம் என்று தெரிவித்தார். விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன், சாய் அப்யங்கர் உள்ளிட்ட படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்த அவர், ரசிகர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
பாடலாசிரியர் விவேக், ‘பத்தா’ ஒரு குடும்ப விழா போன்றது எனக் குறிப்பிட்டு, விஜய் சேதுபதி – பாலாஜி தரணிதரன் கூட்டணியின் முந்தைய படைப்புகளை நினைவுகூர்ந்தார். இந்தப் படமும் அந்த வரிசையில் ரசிகர்களை கவரும் என நம்பிக்கை தெரிவித்தார்.
- Advertisement -
இயக்குநர்கள் பாக்கியராஜ் கண்ணன் மற்றும் சிபி சக்கரவர்த்தி ஆகியோரும் ‘பத்தா’ படக்குழுவினரை பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர். விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன், அட்லி மற்றும் படக்குழுவினரின் பணியை அவர்கள் பாராட்டிப் பேசினர்.
நடிகை லிஜோமோல் ஜோஸ், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் பணியாற்றியதும், விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்ததும் தனக்கு சிறப்பான அனுபவமாக இருந்ததாக தெரிவித்தார். ‘பத்தா’ உலகின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இயக்குநர் பாலாஜி தரணிதரன் பேசுகையில், கொரோனா ஊரடங்கு காலத்தில் ‘பத்தா’ படத்தின் கதையை எழுதத் தொடங்கியதாகவும், திரைக்கதையை முடித்ததும் முதலில் விஜய் சேதுபதியிடம் கதையைச் சொன்னதாகவும் தெரிவித்தார். விஜய் சேதுபதி மூலம் அட்லியிடம் கதை சென்றதாகவும், கதை கேட்ட உடனேயே அட்லி படத்தைத் தயாரிக்க முன்வந்ததாகவும் அவர் கூறினார்.
படத்தின் கலை வடிவமைப்பு, ஒளிப்பதிவு மற்றும் இசை ஆகியவை ‘பத்தா’ உலகத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளதாகவும் பாலாஜி தரணிதரன் குறிப்பிட்டார். சாய் அப்யங்கரின் இசை தன்னை ஆச்சரியப்படுத்தியதாகவும், பாடல்கள் மட்டுமின்றி பின்னணி இசையிலும் அவர் சிறப்பாக பணியாற்றியுள்ளதாகவும் பாராட்டினார்.
இசையமைப்பாளர் சாய் அப்யங்கர், அட்லி மூலமாக ‘பத்தா’ படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்தார். பாலாஜி தரணிதரனின் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சீதக்காதி’ படங்களின் ரசிகர் என்பதால் இந்த வாய்ப்பை உடனடியாக ஏற்றுக்கொண்டதாகவும் கூறினார். விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற தனது நீண்டநாள் ஆசை இப்படத்தின் மூலம் நிறைவேறியதாகவும் அவர் தெரிவித்தார்.
நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், ‘பத்தா’ திரைப்படம் உலகத் திரைப்பட விழாக்களிலும், திரையரங்குகளிலும் பேசப்படும் என அட்லி கூறிய வார்த்தை தனக்கு நம்பிக்கையை அளித்ததாக தெரிவித்தார். பாலாஜி தரணிதரனுடனான தனது நீண்டகால நட்பையும், அவரது படைப்புகளைப் பற்றியும் அவர் நினைவுகூர்ந்தார்.
லிஜோமோல் ஜோஸின் நடிப்பைப் பாராட்டிய விஜய் சேதுபதி, சாய் அப்யங்கரின் இசையும் படத்திற்கு முக்கிய பலமாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டார். ‘பத்தா’வில் இடம்பெறும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
மேலும், படத்தைப் பார்த்த பிறகு ஒருவர் ‘பத்தா’வை ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப வேண்டும் எனக் கூறியதாகவும் விஜய் சேதுபதி தெரிவித்தார். அந்த அளவுக்கு இப்படத்தின் மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார்.
இயக்குநர் அட்லி பேசுகையில், ‘பத்தா’ வெறும் திரைப்படம் மட்டுமல்ல; காலம் கடந்தும் சிந்திக்க வைக்கும் படமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். மனிதநேயம் மற்றும் நல்ல மனிதராக இருப்பதன் அவசியத்தைப் பேசும் இப்படம், அதே நேரத்தில் புதிய விதமான மாஸ் பொழுதுபோக்கு படமாகவும் இருக்கும் எனக் குறிப்பிட்டார்.
பாலாஜி தரணிதரனின் திறமையைப் பாராட்டிய அட்லி, தமிழ் சினிமாவில் உள்ள திறமைகளை கொண்டாட வேண்டும் எனத் தெரிவித்தார். இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கரின் திறமையையும் பாராட்டிய அவர், அவருக்கென தனித்துவமான இசைப் பயணம் அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து விஜய் சேதுபதியுடனான தனது நெருக்கமான உறவு குறித்தும் அட்லி பேசினார். தனது திரையுலகப் பயணத்தில் விஜய் சேதுபதி முக்கியமான ஆதரவாக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், தன்னை வளர்த்ததில் விஜய் சேதுபதியின் பங்கு இருப்பதாகத் தெரிவித்தார். சமூக வலைதளங்களில் வரும் எதிர்மறையான கருத்துகளைப் பொருட்படுத்தாமல் இலக்கை நோக்கி தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். ‘ஜெய் பீம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். செல்வகுமார் SK ஒளிப்பதிவு செய்ய, ஆர். கலைவாணன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். டி. முத்துராஜ் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், அஷ்வின் முருகன் இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘பத்தா’ திரைப்படம் அக்டோபர் 1-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.