‘நந்தன்’ திரைப்படத்தின் மூலம் தலித் பஞ்சாயத்து தலைவர்களின் வாழ்வியலை அழுத்தமாகப் பதிவு செய்த இயக்குநர் இரா. சரவணன், தற்போது தனது அடுத்த படைப்பாக ‘நந்தன் 2’ திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்.
இரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இரா. சரவணன் எழுதி இயக்குகிறார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் டைட்டில் லுக் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
வழக்கமான திரைப்பட போஸ்டர்களில் இருந்து மாறுபட்ட வகையில் இந்த டைட்டில் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. கருப்பு-வெள்ளை பின்னணியில், சிறுமி ஒருவர் கையில் தண்ணீர் ஏந்தியிருக்கும் உலோகப் பாத்திரத்தின் பிரதிபலிப்பில் கேமராக்களுடன் செய்தியாளர்கள் மற்றும் படக்குழுவினர் இடம்பெற்றிருப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதன் மையத்தில் சிவப்பு நிறத்தில் இடம்பெற்றுள்ள ‘நந்தன் 2’ என்ற தலைப்பு, படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
- Advertisement -
‘நந்தன்’ படத்தைப் போலவே சமூக அக்கறை கொண்ட முக்கிய பிரச்சனையை மையமாகக் கொண்டு ‘நந்தன் 2’ உருவாகி வருகிறது. முதல் பாகத்தை விடவும் அழுத்தமான சமூக கருத்துடன் இப்படம் உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
தற்போது ‘நந்தன் 2’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனுடன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ‘நந்தன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இரா. சரவணன் இயக்கும் அடுத்த படம் என்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இரா. சரவணனின் இயக்கமும், நிவாஸ் கே. பிரசன்னாவின் இசையும் இணையும் இந்தக் கூட்டணி, படத்தின் கதைக்கும் உணர்வுக்கும் கூடுதல் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘நந்தன் 2’ படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் குறித்த முழுமையான தகவல்கள் அடுத்தடுத்த அப்டேட்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.