‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் இடம் பெற்ற பாட்டு வரிகள் நீக்கப்பட்டுள்ளன. இது குறித்த விவரம் பார்ப்போம்..
ஆர்யா தயாரிப்பில் சந்தானம் நடித்த ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படம் நாளை ரிலீஸாகிறது. இப்படத்தில், திருப்பதி ஏழுமலையானை கிண்டல் செய்யும் விதமாக பாடல் இடம்பெற்றதாக ஜனசேனா கட்சியினர் போராட்டம் நடத்தினர். மேலும், காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.
தற்போது படத்தில் இருந்து அந்த பாடலை படக்குழு நீக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், தயாரிப்பாளரான ஆர்யா உள்ளிட்ட படக்குழுவினர் சர்ச்சைக்குரிய பாடலை நீக்கியுள்ளனர்.
‘கோவிந்தா கோவிந்தா’ என்கிற வரிகள் இடம்பெற்ற ‘கிஸ்ஸா’ பாடல் ஏழுமலையான் பக்தர்களின் மனதை புண்படுத்துவதாக ஜனசேனா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது அந்த பாடலை படத்தில் இருந்து நீக்கி, மீண்டும் மறு தணிக்கையை படக்குழு பெற்றுள்ளது. இதனால், நாளை வெளியாகும் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் அந்த பாடல் இடம்பெறாது என படக்குழு உறுதியளித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. தயாரிப்பு நிறுவனங்கள் தரப்பில், குறிப்பிட்ட பாடலில், ஆட்சேபம் தெரிவித்த வரிகள் நீக்கப்பட்டு, பாடல் மாற்றியமைக்கப்பட்டு, புதிய சென்சார் சான்று பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில், இருந்தாலும், பாடலின் டியூன் பயன்படுத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இதுபோல டியூனை பயன்படுத்த வேண்டும் என தோன்றியது? மற்ற மதங்களைப் பற்றி இதுபோல பாடல் பயன்படுத்த தைரியம் உள்ளதா? எந்த மதங்களுக்கும் அவதூறு ஏற்படுத்த அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், டியூனை மியூட் செய்வது குறித்து விளக்கம் தெரிவிக்க, தயாரிப்பு நிறுவனங்கள் தரப்புக்கு அறிவுறுத்தினர்.
அதன்படி விளக்கம் பெற்ற பட தயாரிப்பு தரப்பு வழக்கறிஞர், பாடல் டியூன் மியூட் செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், நாளை விரிவான உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறி, விசாரணையை தள்ளிவைத்தனர்.