ராஜ்குமார் ராவாக மாறிய சவுரவ் கங்குலி… ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான சவுரவ் கங்குலியின் வாழ்க்கைப் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது.
சிறந்த இளம் கிரிக்கெட் வீரராக அறிமுகமாகி, இந்திய அணியின் மிகவும் செல்வாக்கு மிக்க கேப்டனாக உயர்ந்த சவுரவ் கங்குலியின் போராட்டம், விடாமுயற்சி, தலைமைத்துவம் மற்றும் இந்திய கிரிக்கெட்டில் அவர் ஏற்படுத்திய புரட்சிகர மாற்றங்களை இப்படம் பதிவு செய்கிறது. ஒரு தலைமுறைக்கு தன்னம்பிக்கையையும் துணிச்சலையும் விதைத்த அவரது பாரம்பரியத்தை திரையில் கொண்டுவரும் முயற்சியாக இந்த படம் உருவாகியுள்ளது.
வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், 2002 நாட்வெஸ்ட் டிராபி வெற்றிக்குப் பிறகு லார்ட்ஸ் மைதானத்தின் பால்கனியில் சவுரவ் கங்குலி தனது ஜெர்சியை சுழற்றி கொண்டாடிய வரலாற்று தருணத்தை, நடிகர் ராஜ்குமார் ராவ் அசத்தலாக மீண்டும் உருவாக்கியுள்ளார். இந்திய கிரிக்கெட்டின் அச்சமற்ற புதிய யுகத்தை குறிக்கும் அந்த சின்னமான தருணம், ரசிகர்களிடம் மீண்டும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தை விக்ரமாதித்யா மோத்வானே இயக்கியுள்ள நிலையில், லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் தயாரித்துள்ளனர். டி-சீரிஸ், DBL மற்றும் Luv Films இணைந்து வழங்கும் இந்த வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம், 2027 மே 14 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.