டிஜிட்டல் யுகத்தில் காதலும் உறவுகளும் எவ்வாறு மாறியிருக்கின்றன என்பதை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது புதிய தமிழ் வெப் சீரிஸ் ‘#Love’. நேரில் சந்தித்து காதல் மலர்ந்த காலம் மாறி, தற்போது டேட்டிங் ஆப்களில் ஸ்வைப், மேட்ச், மெசேஜ் மூலம் உறவுகள் தொடங்கும் சூழலை இந்தத் தொடர் பேசுகிறது.
சௌந்தர்யா ரஜினிகாந்த் ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ள இந்தத் தொடரை பாலாஜி மோகன் இயக்கியுள்ளார். இதில் அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
FOUND மற்றும் Find My Bae எனும் இரண்டு டேட்டிங் ஆப்களைச் சுற்றி கதை நகர்கிறது. பிறருக்கு சரியான துணையைத் தேடிக் கொடுப்பதைத் தொழிலாகக் கொண்டுள்ள இந்த இரண்டு ஆப்களின் நிறுவனர்களான தாரா மற்றும் மேத்யூ, தங்களுக்கான காதலை மட்டும் கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து உருவாகும் போட்டி, காதல் மற்றும் உறவுகளே தொடரின் மையக் கதையாக அமைந்துள்ளது.
இன்றைய தலைமுறையின் காதல் மற்றும் உறவுகளை நகைச்சுவையுடன் பதிவு செய்யும் இந்தத் தொடர் குறித்து, நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவின் உள்ளடக்க துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில், புதிய அணுகுமுறையுடன் உருவாகியுள்ள இந்தக் கதை பார்வையாளர்களுடன் எளிதில் தொடர்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
- Advertisement -
தொடரின் ஷோ-ரன்னரும் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த், நவீன உறவுகளின் மாற்றங்களை இயல்பாகக் கூறுவதோடு, அவற்றின் உணர்வுகளையும் அன்பையும் கதை விட்டுவிடவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் பாலாஜி மோகன், காதல் மற்றும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் விதம் மாறியிருந்தாலும், உறவுகளுக்குள் இருக்கும் அடிப்படை உணர்வுகள் மாறுவதில்லை என்பதையே தொடரின் மூலம் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். காதலைத் தாண்டி நட்பு, குடும்பம், லட்சியம் மற்றும் சுய புரிதல் ஆகியவையும் கதையின் முக்கிய அம்சங்களாக இடம்பெறுகின்றன.
‘#Love’ தொடரை நிர்மல் வில்லியம்ஸ் எழுதியுள்ளார். ஷரதா சுப்ரமணியன் மற்றும் ஸ்வேதா சக்ரவர்த்தி இணை எழுத்தாளர்களாகப் பணியாற்றியுள்ளனர். May6 Entertainment Factory நிறுவனம் தயாரித்துள்ளது.
காதலில் முக்கியமானது கெமிஸ்ட்ரியா… அல்லது கம்ஃபோர்ட்டா? இதற்கான பதிலை அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் ‘#Love’ தொடரில் பார்க்கலாம்.
‘Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்!