நடிகர் சரத்குமாரின் 177-வது படம் ‘டாக்ஸி’

நடிகர் சரத்குமார் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘டாக்ஸி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. பெர்ஜெயா குழுமம் மற்றும் ரேடான் மீடியா வொர்க்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படம் அதிரடி ஆக்‌ஷன் என்டர்டெயினராக உருவாகிறது.

இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் திரைத்துறை மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

பெர்ஜெயா கார்ப்பரேஷன் பெர்ஹாட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் ஆலோசகரான டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ வின்சென்ட் டான், மஹா பெர்ஜெயா ஃப்ரோஸன் ஃபுட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் சப்ரினா சியாமலா பின்தி அப்துல்லா, புவான் ஸ்ரீ வோங் யோக் லியான் மற்றும் மலேசிய மனிதவள மேம்பாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியும், கிரீன் பேக்கெட் பெர்ஹாட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான ஷாஹுல் ஹமீத் பின் ஷேக் தாவூத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

இவ்விழாவில் இயக்குநர் மணிரத்னமும் கலந்துகொண்டு சிறப்பித்தார். இப்படத்தின் இயக்குநர் தனா, மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விழாவில் பேசிய மணிரத்னம், இயக்குநர் தனாவின் முயற்சியைப் பாராட்டியதுடன், தயாரிப்பு நிறுவனங்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

- Advertisement -

தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் விழாவுக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களை வரவேற்றார்.

இந்தியத் திரையுலகில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து வரும் சரத்குமாரின் 177-வது திரைப்படமாக ‘டாக்ஸி’ உருவாகிறது. ஆக்‌ஷன் கதாபாத்திரங்களில் தொடர்ந்து தனது முத்திரையைப் பதித்து வரும் சரத்குமாருக்கு, இப்படம் மற்றுமொரு முக்கியப் படைப்பாக அமையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

‘வானம் கொட்டட்டும்’ படத்தின் மூலம் விமர்சன ரீதியாகக் கவனம் பெற்ற இயக்குநர் தனா இப்படத்தை இயக்குகிறார். ஜெயமோகன் கதை எழுத, ஐ. நவீன்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். சண்டைக் காட்சிகளை சில்வா மாஸ்டர் வடிவமைக்கிறார். சங்கத் தமிழன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். ஹர்ஷினி ரவிச்சந்தர் ஆடை வடிவமைப்பாளராகவும், உத்ரா மீனாட்சி கொங்கரா நிர்வாகத் தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.

திரைப்படத் தயாரிப்பில் முதன்முறையாகக் கைகோர்த்துள்ள பெர்ஜெயா குழுமம் மற்றும் ரேடான் மீடியா வொர்க்ஸ் நிறுவனங்களின் இந்தக் கூட்டணி, தமிழ் சினிமா வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் நடிக்கும் இதர நடிகர்கள் மற்றும் படப்பிடிப்பு குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Actor Sarathkumar’s 177th Film Titled TAXISarathkumarTAXI