பாலிவுட்டின் ‘மிஸ்டர் பெர்ஃபெக்ட்’ என்று அழைக்கப்படும் முன்னணி நடிகர் ஆமிர் கான் (61), தனது காதலியான கவுரி ஸ்ப்ராட்டை இன்று மும்பை பாலி ஹில்லில் உள்ள இல்லத்தில் எளிய முறையில் திருமணம் செய்து கொண்டார். இது ஆமீர் கானின் மூன்றாவது திருமணமாகும்.
சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட புரோமோஷன் நிகழ்வில் பங்கேற்றிருந்த ஆமிர் கான், தனது திருமணத் தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியிருந்தார்.
“ஜூலை 5-ஆம் தேதி என் திருமணம் நடைபெறுகிறது. வீட்டிலேயே எளிய முறையில் நடத்துகிறோம். இரு குடும்பத்தினரும், சில நெருங்கிய நண்பர்களும் மட்டுமே இதில் கலந்துகொள்கிறார்கள். உங்கள் அனைவரின் ஆசிகளும் எங்களுக்கு வேண்டும்,” என்று அவர் தெரிவித்திருந்தார்.
பெங்களூரைச் சேர்ந்த கவுரி ஸ்ப்ராட், ஃபேஷன், அழகு மற்றும் ஆரோக்கியத் துறையில் தொழில்முனைவோராக செயல்பட்டு வருகிறார். ஆமீர் கானுடன் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நட்பில் இருந்த இவர், பின்னர் காதலாக மாறிய உறவின் மூலம் அவரது வாழ்க்கைத் துணையாக இணைந்துள்ளார்.
பாலிவுட்டின் வழக்கமான பிரம்மாண்ட திருமணங்களுக்கு மாறாக, இந்தத் திருமணம் மிகவும் எளிமையாக குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. திருமணப் பதிவு முடிந்ததைத் தொடர்ந்து, 100 முதல் 150 நெருங்கிய விருந்தினர்களுக்காக சிறப்பு மதிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த விழாவில் ராஜ்குமார் ஹிரானி, அசுதோஷ் கோவாரிகர், ராஜ்குமார் சந்தோஷி உள்ளிட்ட முக்கிய இயக்குநர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆமீர் கானின் முதல் மனைவி ரீனா தத்தா மூலம் ஜுனைத் கான், ஈரா கான், இரண்டாவது மனைவி கிரண் ராவ் மூலம் ஆசாத் ராவ் கான் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். அதேபோல் கவுரி ஸ்ப்ராட்டுக்கு முந்தைய திருமணத்தில் ஒரு மகனும் உள்ளார். தற்போது மும்பை பாலி ஹில் இல்லம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு திருமணக் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.