தெலுங்கு திரையுலக பிரபலங்கள் 25 பேர் மீது பெட்டிங் ஆப்களில் விளம்பரம் செய்த குற்றத்துக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரம்மி விளையாட்டுகள் போன்ற பல பெட்டிங் ஆப்கள் இளைஞர்களின் பணத்தை சூறையாடி அவர்களை தற்கொலை செய்யும் அளவுக்கு தூண்டுகிறது.
‘மதுவினால் வரும் போதைபோல’ விரைவில் பணம் சம்பாதித்து விடலாம் என்கிற போதையை சில முன்னணி நடிகர்களே காசுக்காக விளம்பரப்படுத்தி, ரசிகர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர் என ஹைதராபாத்தை சேர்ந்த பனிந்த்ரா ஷர்மா என்பவர் மார்ச் 19-ம் தேதி கொடுத்த புகாரின் பேரில் எஃப்ஐஆர் போடப்பட்டு விசாரணைக்காக அவர்களுக்கு நோட்டீஸும் வழங்கப்பட்டுள்ளது.
பிரகாஷ்ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, நிதி அகர்வால், லக்ஷ்மி மஞ்சு உள்பட பிரபல நடிகர்கள் மீதும் அனன்யா நாகெல்லா, ஸ்ரீ ஹனுமந்து, ஸ்ரீமுகி, வர்ஷினி சவுந்தர்ராஜன், வசந்தி கிருஷ்ணன், ஷோபா ஷெட்டி, அம்ருதா சவுத்ரி, நயனி பவனி, நேகா பதான், பாண்டு, பத்மாவதி, இம்ரான் கான், விஷ்ணு பிரியா, ஹர்ஷா சாய், சயா சன்னி யாதவ், ஷியாமளா, டேஸ்டி தேஜா, ரிது சவுத்ரி, பந்தாரு சேஷாயணி, சுப்ரிதா உள்ளிட்ட இன்ஃப்ளூயன்சர்கள் என மொத்தம் 25 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சோஷியல் மீடியா மூலம் பணம் சம்பாதிக்கும் இன்ஃப்ளூயன்சர்களுக்கும் சில நடிகர்களுக்கும் பொதுநல எண்ணம் சிறிதும் இல்லாமல், முழு சுயநலமாக சம்பாதிக்கும் மனநிலையுடன் பெட்டிங் ஆப்களை விளம்பரப்படுத்தி வருகின்றனர்.
இதனால் ஏகப்பட்ட இளைஞர்கள் கடனாளியாக மாறி வருகின்றனர் என்றும் சிலர் உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறியுள்ளதாக பனிந்த்ரா ஷர்மா அளித்த புகாரின் பேரில், தீவிர நடவடிக்கையை முடுக்கி விட ரேவந்த் ரெட்டி அரசு தீர்மானித்துள்ளது என்கின்றனர்.
தெலுங்கு சினிமா மீது முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு ஏதாவது பகையா? என்கிற பேச்சுக்களும் கிளம்பியுள்ளன. ஆனால், பொது மக்களுக்கு நடிகர்கள் நல்லது செய்யாமல் தவறான வழிக்கு கொண்டு செல்லும் போது, அதை தட்டிக் கேட்டால் பழி வாங்கும் நடவடிக்கை எடுக்கிறார் என எப்படி சொல்வது? என்றும் பெரும் விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இத்தகைய ‘ரம்மி’ போன்ற ஆப்களுக்கு தமிழ் சினிமா நடிகர்கள் யாரும் விளம்பரம் செய்யவில்லை எனவும் இணையத்தில் தகவல் வருகிறது.