DMK

திருச்சியில் திமுக நடத்திய மாநாட்டில் ரூபாய் 200 கோடி ரூபாய் வரை செலவாகி இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ADMK Complaint on DMK : திருச்சியில் தி.மு.க நடத்திய பொதுக்கூட்டத்தில் 25 ஆயிரம் கார்கள், பட்டாசுகள், பேனர்கள், பந்தல்கள், உணவகங்கள் ஆகியவற்றுக்கு 200 கோடி ரூபாய் செலவு செய்யப்படிருப்பதால், தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள வரம்பை மீறி செலவு செய்த தி.மு.க மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், வேட்பாளர்களின் செலவு கணக்கில் இத்தொகையை சேர்க்க வேண்டும் என்றும் அ.தி.மு.க சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க சார்பில் திருச்சியில் கடந்த 7ம் தேதி பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக, அ.தி.மு.க நிர்வாகி தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்த புகார் மனுவில், தி.மு.க சார்பில் திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட 2 லட்சம் பேர் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் திருச்சிக்கு வந்து மாவட்டம் முழுவதும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தினர். இதனால் பொது மக்கள் செல்வதற்கு பெரும் தடை ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் அவசர கால வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி பொதுக்கூட்டத்திற்காக தி.மு.க 200 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. 2 லட்சம் பேருக்கு உணவு வழங்க 8 உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளது. 25 ஆயிரம் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலைகளில் ஆயிரம் தி.மு.க கொடிக் கம்பங்கள் வைக்கப்பட்டுள்ளது. 1 கோடி ரூபாய் பட்டாசுகள் இக்கூட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர பேனர்கள், கட் அவுட்டுகள், பிரமாண்ட பந்தல் ஆகியவற்றுக்கு 200 கோடி ரூபாய் செலவும் செய்யப்பட்டிருப்பதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பின் தி.மு.க வாக்காளர்களை கவர்வதற்காகவும், வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் விதமாக திருச்சி பொதுக் கூட்டத்தை தி.மு.க நடத்தியுள்ளது. மக்கள் பிரதிநிதிதுவ சட்டத்தில் தெரிவித்துள்ளபடி தி.மு.க கூட்டத்திற்கு செய்யப்பட்ட 200 கோடி ரூபாய் செலவுகளை வேட்பாளர்களின் செலவு கணக்குகளில் சேர்க்க வேண்டும் என்றும் அ.தி.மு.க சார்பில் கொடுக்கப்படுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி ஒரு சட்ட மன்ற தொகுதியில் செலவு செய்யப்பட வேண்டிய அதிகபட்ச தொகை 30,80,000 ரூபாய். தி.மு.க 180 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 180 தொகுதிகளும் சேர்த்து, அதிகபட்சமாக தி.மு.க செலவு செய்ய அனுமதிக்கப்பட்ட தொகை 55 கோடியே 44 லட்சம் ரூபாய் . தி.மு.க ஏற்கனவே திருச்சி பொதுக்கூட்டத்தின் மூலம் தேர்தல் ஆணையத்தின் செலவு வரம்பை மீறி 200 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளது. தி.மு.க தேர்தலுக்காக இனி ஒரு ரூபாய் கூட செலவு செய்ய அனுமதிக்க கூடாது என்றும் திருச்சி பொதுக்கூட்டத்திற்கு செலவு செய்யப்பட்ட கணக்குகளை உடனடியாக தாக்கல் செய்யுமாறும், தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக தேர்தல் ஆணையம் சட்ட படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் நலன் கருதியும், பாரபட்சமற்ற வகையில் தேர்தலை நடத்திடும் வகையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அ.தி.மு.க சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.