
கனடாவில் மேற்படிப்பு படித்து கொண்டிருந்த மாணவியை இந்தியாவுக்கு வரவழைத்து திருமணம் செய்த நபர் அவரை கொலை செய்து யாருக்கும் தெரியாமல் புதைத்த சம்பவம் ஒரு வருடம் கழித்து வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஹரியானாவை சேர்ந்த 23 வயது மோனிகா என்ற இளம்பெண் கனடாவில் மேல்படிப்பு படித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அவரது ஊரைச் சேர்ந்த சுனில் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் கனடாவில் இருந்து பெற்றோருக்கு தெரியாமல் இரண்டு முறை இந்தியாவுக்கு வந்து சுனிலை மோனிகா சந்தித்ததாகவும் அப்போது அவர் சுனிலை ரிஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சுனில் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தை என்பதை மறைத்து மோனிகாவை திருமணம் செய்ததாகவும், மோனிகாவுக்கு கனடாவில் நிரந்தர விசா இருந்ததால் கனடாவில் சென்று செட்டில் ஆகிவிடலாம் என்று சுனில் திட்டமிட்டு இருந்ததாகவும் தெரிகிறது.
ஆனால் அந்த திட்டம் நிறைவேறவில்லை என்பதால் ஆத்திரம் அடைந்த அவர் மோனிகாவை கொலை செய்து தனது பண்ணை வீட்டில் புதைத்து விட்டார். கனடாவில் இருந்து இந்தியா வந்து சுனிலை திருமணம் செய்தது மோனிகாவின் பெற்றோருக்கு தெரியாது என்பதால் கனடாவில் காணாமல் போய் விட்டதாக புகார் அளித்தனர்.
இந்த நிலையில் சுனிலின் பண்ணை வீட்டில் எலும்பு கூடுகள் கிடைத்ததை அடுத்த விசாரணை செய்தபோதுதான் சுனில் மோனிகாவை திருமணம் செய்து அதன் பின் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுனில் மீது கொலை வழக்கு திருமணத்தை மறைத்தல் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஹரியானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.