அஜித்துக்கு எல்லாம் எதற்கு ஏஐ தொழில்நுட்பம்: இயக்குனர் ஆதிக் வியப்பு
அஜித்தின் உடல் எடை குறைப்பு பற்றிய நிகழ்வை, ஆதிக் வியப்புடன் கூறியுள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்..
‘தல’ அஜித்தின் தீவிர ரசிகரும் ‘குட் பேட் அக்லீ’ பட இயக்குனருமான ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவிக்கையில், குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது மிகவும் சீரியஷான உடல் எடை குறைப்பில் ஈடுபட்டார் அஜித். அது மிகவும் அபாரமானது.
எனக்கு தெரிந்து யாரும் அப்படி செய்யமுடியுமா என்று எனக்கு சொல்ல தெரியவில்லை. ஒருநாளைக்கு ஒரு வேளை உணவு மட்டுமே எடுத்துக் கொள்வார். திடீரென ஒரு நாள் முழுக்க பட்டினியாக இருப்பார். திரும்பவும் அடுத்த நாள் ஒருவேளை உணவு சாப்பிடுவார். வெறும் தண்ணீர் மட்டுமே குடித்துக் கொண்டிருப்பார்.
அவருடைய கவனம் முழுவதும் கார் ரேசில் ஈடுபடும்போது உடல் எடையை முழுமையாக குறைத்து ஃபிட் ஆக இருக்க வேண்டும் என்பதாகவே இருந்தது. அதற்கு ஏற்றாற்போல் படப்பிடிப்பு முடியும் தருவாயில் எடையை குறைத்து ரெடியாகி விட்டார். அது எனக்கு சாதகமாக அமைந்துவிட்டது.
அஜித் எப்படியும் உடல் எடையை குறைத்துவிடுவார் என்று காத்திருந்து கடைசியாக அதற்கான காட்சிகளை எடுத்தோம். அஜித்துக்கு எதற்கு ஏஐ தொழில்நுட்பம் எல்லாம். அவர் மிகவும் அழகான, அன்பான, இனிமையான மனிதர். உள்ளே அழகு இருந்தால்தான் அந்த அழகு வெளியேயும் பிரதிபலிக்கும். அவர் ஒன்றை முடிவு செய்துவிட்டால், அதை செய்யாமல் விடவே மாட்டார்’ என ஆதிக் தெரிவித்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள குட் பேட் அக்லி’ படத்தில் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு, யோகிபாபு, சைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் நாளை மறுநாள் 10-ம் தேதி வெளியாக உள்ளதால், திரையரங்குகளில் ‘தல’ திருவிழா களை கட்டத் தொடங்கியுள்ளது.