கிரிப்டோ கரன்ஸி மோசடி கும்பல் செய்தி குறித்து, நடிகை தமன்னா
‘தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம்’ என தமன்னா குறிப்பிட்டுள்ளார். இது பற்றிய விவரம் காண்போம்..
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதன் மூலம், அதிக லாபம் ஈட்டலாம் என்ற நம்பிக்கையில் முதலீடு செய்தவர்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தனர். இவர்களில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் அசோகன், போலீசில் புகார் அளித்ததை அடுத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில், நடிகைகள் தமன்னா மற்றும் காஜல் அகர்வாலை விசாரிக்க புதுச்சேரி காவல்துறை முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியானது. இது குறித்து தமன்னா தெரிவிக்கையில்,
‘கிரிப்டோ கரன்சி மோசடியில் நான் ஈடுபட்டதாக செய்திகள் வந்துள்ளதாக என் கவனத்திற்கு வந்துள்ளது. இதுபோன்ற போலியான மற்றும் தவறான வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று எனது ஊடக நண்பர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க எனது குழு செயல்படும்’ என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், ஆன்லைன் கிரிப்டோகரன்சி செயலி மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த வழக்கில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸார் தமன்னா மற்றும் காஜல் அகர்வாலை விசாரணைக்கு அழைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, கிரிப்டோ கரன்சி மோசடி கும்பலைச் சேர்ந்த நிதிஷ்குமார் ஜெயின், அரவிந்த்குமார் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
கிரிப்டோகரன்சி மோசடி வழக்கில் தொடர்புடையவர்கள் கோவை, மகாபலிபுரம், மும்பை மற்றும் பிற இடங்களில் மிகவும் விலையுயர்ந்த விருந்துகளை ஏற்பாடு செய்தனர். இதில் தமன்னா, காஜல் மற்றும் பிற பிரபலங்கள் கலந்து கொண்டதாக அறியப்படுகிறது.
இதற்காக எவ்வளவு பணம் வழங்கப்பட்டது, எந்த வங்கிக் கணக்கு மூலம் பணம் அனுப்பப்பட்டது, அவர்களுக்கும் அந்த கும்பலுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரிக்க, புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் தமன்னா மற்றும் காஜலுக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான், தமன்னா, இதில் தொடர்பில்லை என தெரிவித்துள்ளார்.