சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக யாருடன் கூட்டணி?: பிரசாந்த் கிஷோர் தகவல்
அரசியல் பேசும் படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படம் முடிவடைந்ததும், தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவில், மும்மொழிக் கல்வி தொடர்பாக மத்திய-மாநில அரசுகள் மீது விஜய் கடும் விமர்சனம் செய்தார்.
பிரசாந்த் கிஷோரையும் மேடை ஏற்றினார் விஜய். முன்னதாக பிரசாந்த் கிஷோரும் விஜய்யும் சென்னையில் சந்தித்து பேசினர். இதேபோல் தவெக நிர்வாகிகளும் பிரசாந்த் கிஷோரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
சினிமா-அரசியல் வட்டாரம் பரபரப்பான இச்சூழ்நிலையில், பிரசாந்த் கிஷோர், ‘2026 சட்டமன்றத் தேர்தலை தவெக எதிர்கொள்வது தொடர்பான வியூகங்களை தெரிவித்துள்ளார்.
அதாவது, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தவெக தனித்துப் போட்டியிடும். மேலும் விஜய்யுடன் கூட்டணி வைக்க அதிமுக விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால், விஜய் தனித்துக் களம் காண முடிவு செய்துள்ளார். விஜய் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார்’ என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்தே, திமுக மற்றும் பாஜகவைதான் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதுவரை அதிமுகவை விமர்சிக்கவில்லை. இதனால், சட்டமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கூட்டணி அமைக்கும் திட்டம் இல்லை என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், மாற்றம் ஒன்றே மாறாதது என்பதுபோல, விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிறகும், தேர்தல் நெருங்கும் வேளையிலும் மக்கள் மனநிலை என்ன என்ற கணிப்புகள் ஓரளவிற்கு தெரிய வரலாம். அச்சூழலில் தவெக எடுக்கும் முடிவில் மாற்றம் நிகழுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.