ஆர்த்தியும் ரவிமோகனும் இணைந்து வாழ வேண்டும்: சுஜாதா விளக்கம்
ஆர்த்தியின் தாயார் சுஜாதா வெளியிட்டுள்ள அறிக்கை காண்போம்..
நடிகர் ரவிமோகன் சமீபத்தில் வெளியிட்டிருந்த அறிக்கையில், கடந்த சில வருடங்களாகவே நான் என்ன மாதிரியான நெருக்கடிகளை சந்தித்தேன் என்பது என்னுடைய சினிமா நண்பர்களுக்கு தெரியும்.
ஒரு வருடத்துக்கு முன்பு எனது முன்னாள் மனைவியின் தாய் பல கோடி ரூபாய் கடன் வாங்கினார். அந்தக் கடனுக்கு நான் உத்தரவாதம் அளித்து கையெழுத்து போடும் கட்டாயத்துக்கு அவர்களால் தள்ளப்பட்டேன்.
மேலும், பத்து நாட்களுக்கு முன்புகூட ஆர்த்தியின் தாயார் என்னை தொடர்புகொண்டு, நான் அந்தக் கடனுக்கு கொடுத்திருந்த உத்தரவாதத்துக்காக ஒரு படத்தில் நடிக்க சொல்லி வற்புறுத்தினார்.
எப்போதெல்லாம் அவர்களுக்கு பணம் தேவைப்படுகிறதோ அதற்குத்தான் அவர்களுக்கு ரவி மோகன் என்ற பெயர் தேவைப்படுகிறது. கடந்த 16 வருடங்களாக நான் இப்படித்தான் நிம்மதியில்லாமல் வாழ்ந்து வருகிறேன்.
இப்படியான நெருக்கடியான வாழ்க்கையிலிருந்து பீனிக்ஸ் பறவையை போல் மீண்டு எழுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. இப்போதும் இருக்கிறது.
கடந்த சில நாட்களாக என் மீது அவதூறு கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். மக்கள் மத்தியில் பொய்யான தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்கள்.
அவர்கள் என்னை பொன் முட்டையிடும் வாத்தாகவே பார்த்தார்கள். எனது அப்பா, அம்மாவுக்கு பணம் அனுப்பக்கூட அவர்கள் என்னை அனுமதிக்கவில்லை. எனது முன்னாள் மனைவியை பிரிந்த சில நாட்களில் என்னுடைய மகனுக்கு விபத்து நடந்தது. அதையும் என்னிடமிருந்து மறைத்து விட்டார்கள். நான் எனது மகனை பார்ப்பதற்கு முயன்றபோது பவுன்சர்களால் தடுக்கப்பட்டேன்’ என்று பல விஷயங்களை கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்த விஷயத்தில் இத்தனை காலமாக அமைதியாக இருந்த ஆர்த்தியின் தாய் சுஜாதா விஜயகுமார் இப்போது விளக்கமளித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
‘என் பேர குழந்தைகளுக்காகவும், அவர்களின் சந்தோஷத்துக்காகவும் மகளும் மாப்பிள்ளையும் இணைந்து வாழ வேண்டும்.
கோடிக்கணக்கான ரூபாய்க்கு பொறுப்பேற்க வைத்ததாக ரவி மோகன் சொன்னது பொய். அவர் அதற்கு ஆதாரம் தர வேண்டும். நான் ஒன்றும் சித்ரவதை செய்யும் மாமியார் இல்லை. அவரை இன்னமும் நான் மகனாகத்தான் பார்க்கிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.