உளவுத்துறை நடவடிக்கைகளின் பின்னணியில் ‘ஆபரேஷன் டிரால்’

அறிமுக இயக்குநர் ரத்தீஷ் வேகா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆபரேஷன் டிரால்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குட்வில் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த பான் இந்தியா இன்வெஸ்டிகேட்டிவ் ஆக்ஷன் த்ரில்லர், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.
உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், ஜம்மு & காஷ்மீரின் டிரால் பகுதியில் உயிரிழப்பை ஏற்படுத்திய கான்வாய் தாக்குதலை பின்னணியாகக் கொண்டுள்ளது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் உண்மைகளை கண்டறியும் பொறுப்பு என்ஐஏ அதிகாரியான ஜெயசூர்யாவிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதன்பின்னர் நடைபெறும் விசாரணை, சதி மற்றும் ஆபத்தான சம்பவங்களே கதையின் மையமாக அமைந்துள்ளன.
வெளியாகியுள்ள டீசரில் படத்தின் பிரம்மாண்டமான காட்சிகள், பதற்றமான சூழல் மற்றும் பரபரப்பான விசாரணைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சம்பவத்தின் முழு பின்னணியையும் வெளிப்படுத்தாமல், தாக்குதலுக்குப் பின்னால் இருப்பது யார், விசாரணை எந்த திசையில் செல்கிறது போன்ற பல கேள்விகளை எழுப்பும் வகையில் டீசர் உருவாக்கப்பட்டுள்ளது.
என்ஐஏ அதிகாரியாக ஜெயசூர்யா தீவிரமான தோற்றத்தில் நடித்துள்ளார். விசாரணை, உளவுத்துறை நடவடிக்கைகள் மற்றும் அதிரடி ஆக்ஷன் நிறைந்த கதையில் அவரது கதாபாத்திரம் முக்கியத்துவம் பெறுகிறது.

‘ஆபரேஷன் டிரால்’ திரைப்படம் கேரளா, கோயம்புத்தூர், புதுடெல்லி, குலு, மணாலி, முசோரி மற்றும் லடாக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் ரத்தீஷ் வேகா இயக்குநராக அறிமுகமாகிறார். இயக்கத்துடன் இசை மற்றும் பின்னணி இசையையும் அவரே கவனித்துள்ளார். ஜெயசூர்யாவுடன் முரளி சர்மா, வினய் ராய், சித்திக், சாய் குமார், நந்தலால் கிருஷ்ணமூர்த்தி, ரித்திகா சிங், காவ்யா ஷெட்டி, அன்சன் பால், சிராஜுதீன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், பாலிவுட் நடிகர்களும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
விசாரணை, ஆக்ஷன் மற்றும் பரபரப்பான திருப்பங்களுடன் உருவாகியுள்ள ‘ஆபரேஷன் டிரால்’, ரசிகர்களுக்கு விறுவிறுப்பான பான் இந்தியா த்ரில்லர் அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.