சாய் அபயங்கரின் ‘ரதிமா’ பாடல் வெளியானது!

இளம் இசையமைப்பாளரும் பாடகருமான சாய் அபயங்கரின் 6-வது சுயாதீன (Indie) பாடலான ‘ரதிமா’ வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது.
திங்க் இண்டி நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டுள்ள இப்பாடல், காதல் முறிவை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நவீன பாப் இசையுடன் கவ்வாலி இசையின் சாயலை இணைத்து, பிரிவின் வலியை சோகமாக மட்டுமே சொல்லாமல், இளமைத் துடிப்புடனும் நேர்மறையான அணுகுமுறையுடனும் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
‘ரதிமா’ பாடலின் இசைக் காணொளியில் சாய் அபயங்கருடன் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் இணைந்து நடித்துள்ளார். இயக்குநர் தேஜோ பரத்வாஜ் இயக்கியுள்ள இந்த வீடியோ, பாடலின் துள்ளலான இசைக்கும் உணர்வுப்பூர்வமான கதைக்களத்திற்கும் ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 24-ம் தேதி அனைத்து முன்னணி இசை தளங்களிலும் ‘ரதிமா’ பாடல் வெளியானது. இதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழா சென்னை ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் 13,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று பாடலை உற்சாகமாகக் கொண்டாடினர்.
ஏற்கனவே தனது தனித்துவமான இசையமைப்பின் மூலம் பல ஹிட் பாடல்களை வழங்கியுள்ள சாய் அபயங்கரின் ‘ரதிமா’ பாடலும் இசை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று, அவரது இண்டி இசைப் பயணத்தில் புதிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.