“யாஷ் ஒரே ஒரு ராக்கிங் ஸ்டார்” – ‘டாக்ஸிக்’ விழாவில் ஹுமா குரேஷி புகழாரம்!

‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்: A Fairy Tale for Grown-Ups’ திரைப்படம் ஆகஸ்ட் 26-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. KVN Productions மற்றும் Monster Mind Creations இணைந்து தயாரித்துள்ள இப்படம் ஆக்ஷன், கேங்ஸ்டர் உலகம், குடும்ப உறவுகள், துரோகம் மற்றும் அதிகாரப் போட்டி என பல்வேறு அம்சங்களுடன் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.
படத்தின் வெளியீட்டை முன்னிட்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், தமிழ் ரசிகர்களைச் சந்தித்து படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்ட முன்வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டு, ‘டாக்ஸிக்’ திரைப்படம் உருவான விதம், தங்களது கதாபாத்திரங்கள் மற்றும் படத்தின் உலகம் குறித்து பகிர்ந்து கொண்டனர்.
பாடலாசிரியரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் பேசுகையில், யாஷ் தாம் மிகவும் ரசிக்கும் ஒரு ஐகான் என்றும், இப்படத்திற்காக மொத்தம் மூன்று பாடல்களை எழுதியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் மூலம் யாஷின் புகழ் உலகளவில் மேலும் உயர வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார். தயாரிப்பாளர் வெங்கட் நாராயணன் கடினமான சூழல்களிலும் உறுதியாக இருந்ததைப் பாராட்டிய அவர், கீது மோகன்தாஸின் துணிச்சலையும் பாராட்டினார்.
நடிகர் சுதேவ் நாயர், ‘டாக்ஸிக்’ திரைப்படத்திற்கு முன்பும், இப்படத்திற்குப் பிறகும் தனது திரைப்பயணத்தில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், யாஷ் தாம் சந்தித்ததிலேயே மிகவும் உத்வேகம் அளிக்கும் மனிதர் என்றும் குறிப்பிட்டார்.
நடிகை ருக்மிணி வசந்த், ‘டாக்ஸிக்’ தனக்கு மிகவும் சிறப்பான திரைப்படம் என்றும், யாஷ் பலருக்கும் உத்வேகமாக இருப்பதாகவும் தெரிவித்தார். யாஷின் ரசிகையாக இருந்த தனது பயணம், தற்போது அவருடன் இணைந்து நடிக்கும் சக நடிகையாக மாறியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக கூறிய அவர், கீது மோகன்தாஸின் துணிச்சலான படைப்பை பாராட்டினார்.
நடிகை ஹுமா குரேஷி, கடந்த மூன்று ஆண்டுகளாக ‘டாக்ஸிக்’ படத்திற்காக பயணித்து வருவதாக தெரிவித்தார். கீது மோகன்தாஸ் தன்னை அணுகியபோது கதாபாத்திரம் குறித்து அதிகம் எதையும் கூறாமல், “என்னை நம்பு” என்று மட்டுமே கூறியதாகவும், அந்த நம்பிக்கையை சிறப்பான படைப்பின் மூலம் கீது காப்பாற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், கியாரா அத்வானியின் அர்ப்பணிப்பையும் பாராட்டிய ஹுமா குரேஷி, “நட்சத்திரங்கள் இருக்கிறார்கள், சூப்பர் ஸ்டார்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரே ஒரு ராக்கிங் ஸ்டார் மட்டுமே இருக்கிறார்; அது யாஷ் சார்,” என புகழாரம் சூட்டினார்.
நடிகை கியாரா அத்வானி பேசுகையில், சென்னைக்கு வருவது இதுவே முதல் முறை என்றும், தமிழ் ரசிகர்கள் அளித்த வரவேற்பு தன்னை நெகிழ்ச்சியடையச் செய்ததாகவும் தெரிவித்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இப்படத்தின் பணிகள் தொடங்கியதாக குறிப்பிட்ட அவர், படக்குழுவினருக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
கீது மோகன்தாஸ் குறித்து பேசிய கியாரா, ஒரு பெண்ணின் கனவும் பார்வையும் காரணமாகவே இந்தப் பிரம்மாண்டமான படைப்பு உருவாகியுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், ‘டாக்ஸிக்’ வெளியான பிறகு யாஷ் இந்திய சினிமாவை உலகளவில் மேலும் உயரத்திற்கு கொண்டு செல்வார் என நம்பிக்கை தெரிவித்தார்.

இயக்குநர் கீது மோகன்தாஸ் பேசுகையில், தனது சிறு வயதிலிருந்தே சினிமா பயணம் தொடங்கியதாகவும், தனது படைப்பின் மீது நம்பிக்கை வைத்து யாஷ் தன்னை இயக்குநராக தேர்வு செய்தது மிகப்பெரிய தருணம் என்றும் தெரிவித்தார். மேலும், பல மாஸ் மற்றும் கமர்ஷியல் படங்களை தனக்கு ரெஃபரன்ஸாக யாஷ் காட்டியதாக கூறிய அவர், ‘டாக்ஸிக்’ திரைப்படம் யாஷின் 2.0 வெர்ஷனாக இருக்கும் என தெரிவித்தார்.
தயாரிப்பாளர் KVN Productions-ன் வெங்கட் நாராயணன் பேசுகையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் கடினமான காலகட்டத்தில் ஆதரவாக இருந்த விஜய் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். விஜய் மீண்டும் திரையில் நடிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தினார்.
‘டாக்ஸிக்’ முற்றிலும் மாறுபட்ட உலகத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் என்றும், கீது மோகன்தாஸ் இப்படத்தை அற்புதமாக உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், யாஷ் இப்படத்தில் பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகவும், அவரது திரைப்பயணத்தில் ‘டாக்ஸிக்’ மற்றொரு மைல்கல்லாக அமையும் என்றும் குறிப்பிட்டார்.
நடிகர் யாஷ் பேசுகையில், தமிழ் மக்கள் தொடர்ந்து தனக்கு அளித்து வரும் அன்புக்கு நன்றி தெரிவித்தார். ‘KGF’ படத்தின் போது தமிழ் ரசிகர்கள் அளித்த வரவேற்பை நினைவுகூர்ந்த அவர், விஜய் மற்றும் ‘ஜனநாயகன்’ படக்குழுவினருக்கு தமிழ் ரசிகர்கள் வழங்கிய ஆதரவையும் பாராட்டினார்.
“சினிமா என்பது கன்னடம், தமிழ் அல்லது தெலுங்கு என பிரிந்தது அல்ல; அது இந்திய சினிமா,” என குறிப்பிட்ட யாஷ், ‘டாக்ஸிக்’ ஆர்வம் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்ட முற்றிலும் வித்தியாசமான உலகத்தை ரசிகர்களுக்கு வழங்கும் என்றும், இப்படம் மிகப்பெரிய திரை விருந்தாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் யாஷுடன் நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த், ஹுமா குரேஷி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவுகள் மற்றும் மோதல்கள், வழக்கமான கேங்ஸ்டர் திரைப்படங்களிலிருந்து ‘டாக்ஸிக்’ படத்தை வேறுபடுத்தும் அம்சங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கீது மோகன்தாஸின் தனித்துவமான காட்சியமைப்பு மற்றும் கதை சொல்லல், பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகள், கலை இயக்கம், ஒளிப்பதிவு மற்றும் பல அடுக்குகளைக் கொண்ட கதாபாத்திரங்கள் என ‘டாக்ஸிக்’ திரைப்படம் ரசிகர்களுக்கு புதிய திரை அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாகியுள்ளது.
ஆங்கிலம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது.
KVN Productions மற்றும் Monster Mind Creations இணைந்து தயாரித்துள்ள ‘டாக்ஸிக்: A Fairy Tale for Grown-Ups’ திரைப்படம் ஆகஸ்ட் 26, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
Rocking Star @TheNameIsYash enters the #Toxic Arena in Chennai 🔥🔥🔥#ToxicTheMove Grand Tamil Pre-Release Event Now Live! https://t.co/ZOqKsd5Uwa#ToxicOn26thAug pic.twitter.com/MW4i45gMhs
— KVN Productions (@KvnProductions) August 24, 2026