வேட்ட சாமி படத்தின் முதல் பாடல் வெளியானது!

தென் தமிழகத்தின் கிராமியத் திருவிழாக்கள் மற்றும் மக்களின் பண்பாட்டைத் தனது காந்தக் குரலாலும் வில்லுப்பாட்டு இசையாலும் கொண்டாடச் செய்தவர் வில்லிசைக் கலைஞர் மாதவி. தற்போது இவர் முதன்முறையாகத் திரைப்படத்தில் பின்னணிப் பாடகியாக அறிமுகமாகியுள்ளார்.
‘பம்பர்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் எம். செல்வக்குமார் இயக்கத்தில், அருள்நிதி மற்றும் அமீர் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘வேட்ட சாமி’. இப்படத்தின் முதல் பாடலான ‘சாமி அழைப்பு’ என்ற லிரிக்கல் வீடியோ அக்டோபர் 30-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.
வில்லுப்பாட்டுக் கலையின் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற மாதவி, இப்படத்தின் மூலம் திரையிசையில் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார். கிராமத்துக் கோவில் திருவிழாக்களின் தெய்வீக உணர்வையும், நாட்டுப்புற இசையின் தனித்துவத்தையும் வெளிப்படுத்தும் வகையில் இப்பாடல் உருவாகியுள்ளது.
இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் மொத்தம் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ‘வீரம் பாயும் நெல்லையிலே…’ எனத் தொடங்கும் ‘சாமி அழைப்பு’ பாடலுக்கு, ‘தாய் கிழவி’, ‘ஜாலியோ ஜிம்கானா’ உள்ளிட்ட பாடல்கள் மூலம் கவனம் பெற்ற பாடலாசிரியர் மு. ஜெகன் கவிராஜ் வரிகள் எழுதியுள்ளார்.

7 MILES PER SECOND Productions சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிக்கும் இப்படத்தில் இயக்குநர் தமிழ், விஜி சந்திரசேகர், ‘ஆடுகளம்’ நரேன், அர்ஜெய், OAK சுந்தர், மதுசூதனன், மைனா நந்தினி, கவிதா பாரதி மற்றும் நந்தினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். தென் தமிழகத்தின் பண்பாடு, வீரம் மற்றும் தெய்வ நம்பிக்கையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. படத்தின் இசை உரிமையை PRIME9 MUSIC நிறுவனம் பெற்றுள்ளது.
தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வரும் டிசம்பர் மாதம் ‘வேட்ட சாமி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.