நவீன் சந்திராவின் ‘என்.சி. 51’ படப்பிடிப்பு நிறைவு!

இயக்குநர், தயாரிப்பாளர், டப்பிங் இயக்குநர் எனத் திரையுலகில் பல்வேறு தளங்களில் பயணித்து வரும் ஆர்.பி. பாலா, முன்னணி ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையாவுடன் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் நவீன் சந்திரா கதாநாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக ‘என்.சி. 51’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஆர்.பி. பாலா இயக்குகிறார்.
‘லெவன்’ திரைப்படத்தில் தனது நடிப்பால் கவனம் ஈர்த்த நவீன் சந்திரா, கதாபாத்திரத் தேர்வில் தனி கவனம் செலுத்தி வருகிறார். அவரது 51-வது திரைப்படமாக உருவாகும் இப்படம், வித்தியாசமான கதைக்களத்துடன் தயாராகி வருகிறது.
ஆர்.பி. பாலா பிலிம்ஸ் மற்றும் பி.ஜி. முத்தையா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, அக்டோபர் 26-ஆம் தேதி சென்னையில் நிறைவடைந்தது. இதனைப் படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

இப்படத்தில் ஹரிபிரியா ரோஷிணி, பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சக்தி பாலாஜி இசையமைக்கிறார். அஜய் மனோஜ் படத்தொகுப்புப் பணிகளைக் கவனிக்கிறார். கலை இயக்கத்தை டி. கிராபோர்டு மேற்கொள்ள, சண்டைக் காட்சிகளை டேஞ்சர் மணி அமைக்கிறார். பாடல்களை மோகன் ராஜா எழுதுகிறார். ஒலிப்பதிவுப் பணிகளை ராஜா நல்லையா கவனிக்கிறார். நிகில் முருகன் மக்கள் தொடர்புப் பணிகளை மேற்கொள்கிறார். அனீஷா ரெஹானா மற்றும் ஹகினோ ஷுன்சுகி கெவின் ஆகியோர் இணைத் தயாரிப்பாளர்களாகப் பணியாற்றுகின்றனர்.
படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தகட்டப் பணிகளை முடித்து இப்படத்தை விரைவில் திரையரங்குகளில் வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
