சீன் ஒரு ஃபிரெஷ்ஷான படைப்பு – துபாயில் நடிகர் சூர்யா பேச்சு!

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியுள்ள ‘சீன்’ திரைப்படத்தின் விளம்பர நிகழ்வு துபாயில் உள்ள பிரபலமான வணிக வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது. ழகரம் ஸ்டுடியோஸ் மற்றும் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் ஜோதிகா – சூர்யா தயாரித்துள்ள இப்படம், வரும் நவம்பர் 6-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
சூர்யா, நஸ்ரியா நஜீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். ஜெயஸ்ரீ தாமோதரன் இணைத் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். அதிரடி அம்சங்கள் நிறைந்த பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகியுள்ள ‘சீன்’, தீபாவளி வெளியீடாக ரசிகர்களைச் சந்திக்க உள்ளது.
படத்தின் விளம்பரப் பணிகளைத் தொடங்கும் வகையில் துபாயில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நடிகர் சூர்யா, நடிகைகள் நஸ்ரியா நஜீம், நடிகர் நஸ்லென், இயக்குநர் ஜித்து மாதவன், இணைத் தயாரிப்பாளர் ஜெயஸ்ரீ தாமோதரன் மற்றும் ராஜசேகர் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ழகரம் ஸ்டுடியோஸ் – புதிய திறமைகளுக்கான தளம்!
நிகழ்வில் பேசிய இணைத் தயாரிப்பாளர் ஜெயஸ்ரீ தாமோதரன், ழகரம் ஸ்டுடியோஸ் சூர்யாவின் கனவு என்றும், அதன் முதல் முயற்சியாக ‘சீன்’ திரைப்படம் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார். 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து தரமான பொழுதுபோக்குத் திரைப்படங்களைத் தயாரிப்பதுடன், ழகரம் ஸ்டுடியோஸ் வழியாகப் புதிய திறமையாளர்களுக்கு வாய்ப்பளிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.
2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் ராஜசேகர் பேசுகையில், ‘சீன்’ திரைப்படம் ழகரம் ஸ்டுடியோஸின் அழகான தொடக்கம் என்றார். இப்படம் திரையரங்குகளில் ரசிகர்களுக்கு நல்ல அனுபவத்தை வழங்கும் என்றும், இதில் சூர்யாவை வித்தியாசமான தோற்றத்தில் பார்க்கலாம் என்றும் தெரிவித்தார்.
“சூர்யாவின் புதிய முகங்களை ரசிகர்கள் பார்க்கலாம்” – சூர்யா
இயக்குநர் ஜித்து மாதவன் பேசுகையில், சூர்யா கதையைக் கேட்ட ஐந்து நிமிடங்களிலேயே சிரிக்கத் தொடங்கியதாகவும், அப்போதே அவருக்குக் கதை பிடித்துவிட்டதை உணர்ந்ததாகவும் கூறினார். மொழிகளைக் கடந்து ரசிகர்கள் திரைப்படங்களைக் கொண்டாடும் சூழலில், ‘சீன்’ படத்தையும் அனைவரும் ரசிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
நடிகர் நஸ்லென், இது தனது முதல் தமிழ்த் திரைப்படம் என்பதால் துபாய் நிகழ்வு தனக்கு மிகவும் சிறப்பானது என்று குறிப்பிட்டார். சிறுவயதில் திரையில் பார்த்து ரசித்த சூர்யாவுடன் இணைந்து நடித்தது கனவு நனவானதைப் போன்ற அனுபவம் என்றும், இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நடிகை நஸ்ரியா நஜீம் பேசுகையில், துபாயில் பிறந்து வளர்ந்த தனக்கு மீண்டும் அங்கு வந்தது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நடித்துள்ள இப்படத்தில் வாய்ப்பளித்த இயக்குநர் ஜித்து மாதவனுக்கு நன்றி தெரிவித்தார். நவம்பர் 6-ஆம் தேதி திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்கள் வயிறு குலுங்கச் சிரித்து மகிழ்வார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
“கிரைம் திரில்லர், மர்டர் மிஸ்டரி மட்டுமல்ல; ஃபேமிலி என்டர்டெய்னரும் கூட!”
நிகழ்வில் பேசிய நடிகர் சூர்யா, இயக்குநர் ஜித்து மாதவனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்பியதாகவும், அவருடைய கதையைக் கேட்டவுடன் இப்படத்தில் நடிக்க முடிவு செய்ததாகவும் தெரிவித்தார். ‘சீன்’ படத்தின் மூலம் ஜித்து மாதவன் ஒரு புதிய உலகத்தை உருவாக்கியுள்ளதாகவும், நஸ்ரியா தனது ‘மாயா’ கதாபாத்திரத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும் பாராட்டினார்.
மேலும், நஸ்லென் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாவதாகக் குறிப்பிட்ட சூர்யா, அவர் தனது நடிப்பில் தனித்துவமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் உள்ளிட்ட பல தொழில்நுட்பக் கலைஞர்களும் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகின்றனர் என்றும் கூறினார்.
தனது 28 ஆண்டுகால திரைப்பயணத்தில் 48 திரைப்படங்களை நிறைவு செய்துள்ள நிலையில், ‘சீன்’ படத்தின் அனுபவம் தனக்குப் புத்துணர்ச்சியளிப்பதாக சூர்யா தெரிவித்தார். இப்படத்தை கிரைம் திரில்லர் அல்லது மர்டர் மிஸ்டரி என வகைப்படுத்தலாம் என்றாலும், குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய பொழுதுபோக்குத் திரைப்படமாகவும் இது இருக்கும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மூலம் ரசிகர்களுக்குப் பிடித்தமான தரமான திரைப்படங்களைத் தயாரிப்பதுடன், ழகரம் ஸ்டுடியோஸ் வழியாக இளம் திறமையாளர்களைக் கண்டறிந்து அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ரசிகர்கள் தன் மீது வைத்திருக்கும் அன்பும் நம்பிக்கையும் தொடர்ந்து உழைக்கத் தூண்டுவதாகக் கூறிய சூர்யா, நல்ல எண்ணங்களுக்கும் நேர்மறையான சிந்தனைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இறுதியாக, தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6-ஆம் தேதி வெளியாகும் ‘சீன்’ திரைப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் பார்த்து ரசிக்க வேண்டும் எனப் படக்குழுவினர் கேட்டுக்கொண்டனர்.
